நம்பிக்கை வாக்கெடுப்பு அமளி.. சட்டசபை செயலாளரிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நம்பிக்கை வாக்கெடுப்பு அமளி.. சட்டசபை செயலாளரிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர் !

சென்னை: தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அமளி குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க அறிக்கை கேட்டுள்ளார்.

சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக கிழிந்த சட்டையுடனேயே ஆளுநர் வித்யாசகர் ராவை ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதேநேரத்தில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடத்தவில்லை என்ற புகாரும் ஆளுநர் முன் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநருக்கு திமுக எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் காவல் துறையினர் சட்டமன்ற அவை காவலர்கள் உடையில் உள்ளே புகுந்து தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றி இருப்பதன் மூலம் இது முன் கூட்டியே திட்ட மிட்ட செயல் என்பது உறுதியாகியுள்ளது என அந்த கடிதத்தில் ஸ்டாலின் விளக்கியுள்ளார். இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஆளுநரை சந்தித்து விளக்கிக் கூறினார். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடம் நடைபெற்றது. அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார் ஓபிஎஸ்.

இந்நிலையில், மும்பை சென்றுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அமளி குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளார். இந்த அறிக்கை கிடைத்த பின்னர் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை என ஆளுநர் கருதினால் நடவடிக்கை எடுக்கக் கூடும் என தகவல்கள் கூறுகின்றன.

மூலக்கதை