உத்தரபிரதேசத்தில் 3ம் கட்டத் தேர்தல்... 61 சதவீதம் வாக்குகள் பதிவு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு இன்று மூன்றாம் கட்டமாக 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. இங்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 3-ம் கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தின் மத்திய மற்றும் அவாத் பிராந்தியங்களில் உள்ள 12 மாவட்டங்களை சேர்ந்த 69 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பெரும்பாலான தொகுதிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு மத்திய படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இன்றைய தேர்தலில் பா.ஜ.க, சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 826 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக 2.41 கோடி பேர் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு செய்தார். முதல்வர் அகிலேஷ் யாதவ் சாய்பாய் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

இந்நிலையில், 3-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 61.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2012 சட்டசபை தேர்தலை விட தற்போது 2 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் பெரும்பாலும் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவின் போது அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடாமல் இருக்க துணை ராணுவம் மற்றும் மாநில போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சுமார் 2 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை