ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை என்னென்ன நடந்தது.. புத்தகம் எழுதுகிறார் ஆளுநர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை என்னென்ன நடந்தது.. புத்தகம் எழுதுகிறார் ஆளுநர்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது முதல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது வரையிலான நிகழ்வுகளில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் பங்கு என்ன என்பது குறித்து புத்தகம் ஒன்று வெளியாக உள்ளது.

மறைந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் தமிழ்நாட்டு அரசியலில் குழப்பங்களுக்கும், பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அப்பல்லோ சென்ற ஆளுநர் மருத்துவர்களிடம் ஜெயலலிதா உடல் நிலை குறித்து கேட்டறிந்ததாக கூறினார். ஆனால், அப்பல்லோ மருத்துவர்கள் செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதாவை ஆளுநர் கண்ணாடி வழியாக பார்த்தார் என்று கூறினார்கள்.

அதே போன்று அக்டோபர் 1-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக வதந்தி பரவியது. அதனால் உடனே மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவை பார்த்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் மற்றும் தமிழக அமைச்சர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டார்.

ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் சிறைக்கு சென்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பரபரப்பு மிகுந்த இந்த காலகட்டத்தை புத்தகமாக எழுத இருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். அதில் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றது வரை எழுத உள்ளார்.

இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களுக்கும் சந்தேகங்களும் ஆளுநர் இந்தப் புத்தகத்தில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது,

மூலக்கதை