சென்னையின் பல்வேறு இடங்களில் தி.மு.க.,வினர் சாலை மறியல்

தினமலர்  தினமலர்
சென்னையின் பல்வேறு இடங்களில் தி.மு.க.,வினர் சாலை மறியல்


சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில், தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலை கண்டித்து, தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் தனபாலின் உருவ பொம்மையை எரித்தனர்.
தமிழக சட்டசபையில் இருந்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னையில் பல்வேறு இடங்களில், தி.மு.க.,வினர் நேற்று, சாலை மறியலில் ஈடுபட்டனர். அதோடு, சபாநாயகர் தனபாலின் உருவ பொம்மையையும் எரித்தனர்.
ஓட்டேரி பிரிக்ளின் சாலை, ஆவடி பேருந்து நிலையம் அருகில், பட்டாபிராம் மற்றும் திருநின்றவூர் அம்பேத்கர் கல்லுாரி சாலை ஆகிய பகுதிகளில், நேற்று மாலை திரண்ட, தி.மு.க., தொண்டர்கள், தனபாலின் உருவ பொம்மையை எரித்து, மறியலில் ஈடுபட்டனர். ஆலந்துார், எம்.கே.என்., சாலையில், சபாநாயகரை எதிர்த்து, தி.மு.க.,வினர் கோஷங்களை எழுப்பினர். திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே, தி.மு.க.,வைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
அதேபோல், தேரடியில் மறியல் செய்த தி.மு.க.,வினர், காலடிபேட்டை காவல்நிலையம் வரை நடந்து சென்று, அங்கு மறியலில் ஈடுபட்டனர். மணலி மார்க்கெட் பகுதியில், கூடிய தி.மு.க.,வினர், மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடார் சங்கத்தினர், 30க்கும் மேற்பட்டோர், கலங்கரை விளக்கம் அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம், தி.மு.க.,வினர், 200க்கும் மேற்பட்டோர், ஜி.எஸ்.டி., சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.குரோம்பேட்டையில், பல்லாவரம் நகராட்சி அலுவலகம் செல்லும் வழியில் உள்ள சிக்னல், வைஷ்ணவா கல்லுாரி சிக்னல் ஆகிய பகுதிகளிலும், தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாதவரம் மண்டல அலுவலகம் எதிரில், சபாநாயகர் தனபாலின் உருவ பொம்மையை எரித்து, தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பத்தூர் சி.டி.எச்., சாலை, கொரட்டூர் சந்திப்பு ஆகிய பகுதிகளிலும், மறியல் மற்றும் உருவ பொம்பை எரிப்பு சம்பவங்களில், தி.மு.க.,வினர்

ஈடுபட்டனர்.

எம்.எல்.ஏ., அலுவலகம் முற்றுகைபெரம்பூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றிவேலை கண்டித்து, பெரம்பூர் தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் பகுதி செயலர், ஜே.கே.ரமேஷ் தலைமையில், 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் பேரணியாக சென்றனர். பின், பெரம்பூர், எம்.எல்.ஏ., சட்டசபை உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். கொடுங்கையூர் போலீசார், போராட்டக்காரர்களை சமாதானம் செய்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

மூலக்கதை