வேதனை:தண்ணீரை கடன் வாங்கி காய்கறி விவசாயம்: அரை ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் டீசல் செலவு

தினமலர்  தினமலர்

காரைக்குடி:மழையில்லாததால் அருகில் உள்ளவர்களிடம் தண்ணீரை கடன் வாங்கி, வாரத்துக்கு ரூ.ஆயிரம் செலவழித்து காய்கறி பயிரிட வேண்டிய நிலைக்கு பெரியகோட்டை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட அரியக்குடி, பெரியகோட்டை, பெத்தாட்சி குடியிருப்பு, மித்திரங்குடி பகுதியில் 300-க்கும் அதிகமான ஏக்கரில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறி விவசாயம் மேற்கொண்டுள்ளனர்.
ஆண்டு முழுவதும் காய்கறி விவசாயம் செய்ய வாய்ப்பிருந்தும், செப்டம்பர், அக்டோபரில் நெல் விவசாய பணிகளையும் மேற்கொள்கின்றனர். நெல் அறுவடை தொடங்குவதற்கு முன்பு கதிர் முற்றிய மார்கழி பட்டத்தில், நிலத்தின் ஒரு பகுதியில் கத்தரிக்காய் விதைகளை துாவி நாற்றங்கால் பாவுகின்றனர்.அறுவடை முடிந்த கையோடு, ஜனவரி, பிப்ரவரியில் நாற்றங்கால் செடிகளை பாத்தி முறையில் நடுகின்றனர். நடவு செய்த 45-வது நாளிலிருந்து கத்தரி பலன் கொடுக்க ஆரம்பிக்கிறது. ஆறு மாதம் வரை காய்பறிப்பு இருக்கும். ஒரு செடியிலிருந்து 5 கிலோ முதல் 10 கிலோ வரை கத்தரி கிடைக்கிறது. அதன் ஊடே வெண்டை, தக்காளி, மிளகாய், கீரை வகைகளும் பயிரிடப்படுகிறது. வெண்டை 25 முதல் 30 நாளிலும், கீரை 15 நாளிலும் பலன் கொடுக்கிறது.
வடகிழக்கு பருவமழையால் கண்மாய்களில் இருக்கும் நீரை பயன்படுத்தி நெல் விவசாயத்தையும், காய்கறி விவசாயத்தையும் மேற்கொள்வார்கள்.இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், நெல் விவசாயத்துக்கே தண்ணீரின்றி, பயிர்கள் வாடி கடும் வறட்சி நிலவியது. கரை சேர்க்க வேண்டிய நெல் பயிர் கைவிட்டாலும், கத்தரிக்காய் கைவிடாது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. தற்போது காணப்படும் வறட்சி இந்த ஆண்டு கத்தரி விவசாயத்தையும் அசைக்க ஆரம்பித்துள்ளது.
எஸ்.காவேரி, விவசாயி, மித்திரங்குடி: வெண்டை, கத்தரி, தக்காளி, பூசணி, புடலை, முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறிகளை பயிரிட்டுள்ளோம். கத்தரிக்காய் தான் பிரதானம். அதை பொறுத்தவரை தண்ணீர் தேங்கி நிற்க கூடாது. ஆனால் ஈரப்பதம் இருக்க வேண்டும். பெரியகோட்டை கத்தரிக்காய் கறிபோன்ற சுவை உடையது என்பதால், சந்தையில் எப்போதும் மவுசு இருக்கும்.
இந்த ஆண்டு மழை பெய்யாததால், நெல் விளைச்சல் இல்லை. இதனால், காய்கறி விளைச்சல் மட்டுமே எங்களின் வறுமையை போக்கும். அதுவும் மழையின்றி போனால் ரொம்ப கஷ்டம். தற்போது, ஜெனரேட்டர் மூலம் போர்வெல் வைத்திருப்பவர்களிடம் கடன் வாங்கி, டீசல் மட்டும் வாங்கி கொடுத்து தண்ணீரை பயிர்களுக்கு பாய்ச்சி வருகிறோம்.
மழை இல்லாததால் விளைச்சலும் எதிர்பார்த்தபடி இல்லை. பூச்சி விழுகிறது. வெயில் அதிகமாக, அதிகமாக தினந்தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டிவரும். தற்போது மூன்று நாட்களுக்கு ரூ.ஆயிரம் வரை செலவாகிறது. தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை வந்தால், வாரத்துக்கு ரூ.2 ஆயிரம் செலவாகும். ஜெனரேட்டர் வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு தினமும் பாய்ச்ச வேண்டியது வந்தால், மற்றவர்களுக்கு தண்ணீர் வழங்க முடியாமல் போகும்.
அதுபோக களையெடுத்தல், உரம் என பல்வேறு செலவுகளை மேற்கொள்ள வேண்டும். இதில் லாபம் எதுவும் இன்றி நஷ்டம் தான் ஏற்படும். தண்ணீர் இல்லாத விவசாயிகள் காலம் காலமாக பார்த்து வந்த காய்கறி விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை வரும். வறட்சி நிவாரணத்துக்கு எழுதி விட்டு போனார்கள். எப்போது வரும் என்பது தெரியவில்லை. இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்து எட்டு ஆண்டாகி விட்டது. அதையும் அரசு செய்ய மறுக்கிறது. பெரிய கோட்டை பகுதி விவசாயிகளை பாதுகாக்க இலவச மின்சாரம் மூலம் பொது போர்வெல் அமைத்து தர வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் தான் பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இது போன்ற வறட்சி காலங்களில், அவர்களுக்கு மாற்று தொழில் செய்யும் வகையில், தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும், என்றார்.

மூலக்கதை