'கியூலக்' கொசு உற்பத்தியால் பல்லாவரம் மக்கள்...அச்சம்! யானைக்கால் நோய் பரவும் முன் நகராட்சி விழிக்குமா?

தினமலர்  தினமலர்
கியூலக் கொசு உற்பத்தியால் பல்லாவரம் மக்கள்...அச்சம்! யானைக்கால் நோய் பரவும் முன் நகராட்சி விழிக்குமா?


பல்லாவரம் நகராட்சியில், யானைக்கால் நோயை பரப்பும், 'கியூலக்' எனப்படும், இரவு நேரத்தில் கடிக்கும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சுகாதார பிரிவினர், எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. அதில், 18 முதல், 31 வரை உள்ள, 14 வார்டுகளில் தேங்கும் குப்பை அகற்றம், கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, இப்பணி முடங்கி போய்விட்டதால், பல இடங்களில் குப்பை தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யாததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மெத்தனம்நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வார்டுகளில் மட்டும், சுகாதார பணிகள் முறையாக நடக்கின்றன. இது குறித்து, கடந்த ஒரு ஆண்டாக, நகராட்சிக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. தனியார் நிறுவனத்தின் மெத்தனத்தை கண்டித்து, 'மெமோ நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது.தற்போது, பல்லாவரம் பகுதியில், கொசு தொல்லை பல மடங்கு அதிகரித்து விட்டது. யானைக்கால் நோயை பரப்பும், 'கியூலக்' எனப்படும், இரவு நேரத்தில் கடிக்கும் கொசு, மக்களை வாட்டி எடுக்கிறது.
கழிவு நீர் கால்வாய், 'செப்டிக் டேங்க்' ஆகியவற்றில் இருந்து உற்பத்தியாகும், இவ்வகை கொசுக்களால், இரவு, 7:00 மணிக்கு மேல், வீட்டிலிருந்து வெளியே வரவே முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளிலும், கதவு, ஜன்னல்கள் மூடப்படுகின்றன.புகை, மருந்து ஆகியவற்றை பயன்படுத்தியும் கொசுக்கள் கட்டுப்படாததால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த வார்டுகளில், கொசு மருந்து அடிப்பதே இல்லை என, அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.
நடவடிக்கைபொதுமக்கள் கூறியதாவது:'வர்தா' புயலுக்கு பிறகு, எதிர்பார்க்க முடியாத அளவிற்கு, கொசு எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பகலைக் காட்டிலும், இரவில் தான் அதிகமாக உள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தபோது, ஒவ்வொரு வார்டிலும், வாரத்திற்கு ஒரு முறை, கொசு மருந்து தெளித்தனர்; அடிக்கடி புகையும் அடித்தனர். பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததில் இருந்து, கொசு மருந்து அடிப்பதே இல்லை. யாரிடம் புகார் தெரிவிப்பது என்பதும் தெரியவில்லை.
நகராட்சிக்கு சென்றால், 'அதிகாரிகள் இல்லை' என்றே கூறுகின்றனர். கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்தால் போதும், கொசுக்களை கட்டுப்படுத்தலாம். இரவில் கடிக்கும், 'கியூலக்' கொசுவால், யானைக்கால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இரவில் கடிக்கும், 'கியூலக்' கொசு அதிகரித்துள்ளது என்பது உண்மை தான். எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறோம்' என்றனர்.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததில் இருந்து, இப்பகுதிகளில் கொசு மருந்து அடிப்பதே இல்லை. இதுகுறித்து, யாரிடம் புகார் தெரிவிப்பது என்பதும் தெரியவில்லை.

- நமது நிருபர் -

மூலக்கதை