அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்... தவிப்பு! தொண்டர்கள் ஆதரவு இல்லாததால் கவலை

தினமலர்  தினமலர்
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்... தவிப்பு! தொண்டர்கள் ஆதரவு இல்லாததால் கவலை

கடலுார்: மக்களின் கருத்துக்கு எதிராக சசிகலாவை ஆதரிக்கும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தொண்டர்களின் ஆதரவு இல்லாததால் கட்சி நிகழ்ச்சிகளை எப்படி நடத்துவது என புரியாமல் தவித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெ., இறந்ததைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலா, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமித்துக் கொண்டார். அதிருப்தி அடைந்த அ.தி.மு.க., முன்னாள் மற்றும் மூத்த நிர்வாகிகள், அடிமட்ட தொண்டர்கள், ஜெ., அண்ணன் மகள் தீபா கட்சி தலைமை ஏற்க வலியுறுத்தி தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.
அதே நேரத்தில் ஆட்சி மற்றும் கட்சி பொறுப்புகளில் இருந்தவர்கள், தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக சசிகலா தலைமை ஏற்று செயல்பட்டு வந்தனர். அவர்களில் பெரும் பகுதியினர் சசிகலா தலைமையை ஏற்க மனமின்றியும், அதனை வெளிப்படையாக கூற முடியாமலும் அமைதி காத்து வந்தனர்.
கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் கடந்த தேர்தலில் கடலுார், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய 5 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இவர்கள் 5 பேருமே சசிகலா அணியில் இடம் பெற்றிருந்ததால், கட்சி நிர்வாகிகள் வாய் மூடி மவுனம் காத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி முதல்வர் பன்னீர்செல்வத்தை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்து, முதல்வர் பதவியை கைப்பற்ற சசிகலா முயன்றார். கடந்த 7ம் தேதி இரவு ஜெ., சமாதியில் தியானம் மேற்கொண்ட பன்னீர்செல்வம், கட்சி மற்றும் ஆட்சியையும் சசிகலா கைப்பற்ற முயல்வதை அம்பலப்படுத்தியதோடு, சசிகலா கும்பலிடம் இருந்து கட்சியைக் காக்க தனி நபராக இருந்து போராடப் போவதாக அறிவித்தார்.
பன்னீர்செல்வத்தின் பகிரங்க அறிவிப்பு கடலுார் மாவட்ட அ.தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பன்னீர்செல்வமே முதல்வராக தொடர வேண்டும் என கட்சி தலைமையை வலியுறுத்தினர்.
குறிப்பாக கடலுார் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து மாவட்டத்தில் பல முன்னோடி நிர்வாகிகள் மட்டுமன்றி தீபா ஆதரவாளர்களும் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால், மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.,வில் எம்.எல்.ஏ.,க்கள், அவர்களின் ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் நிர்வாகிகள் சிலர் மட்டுமே உள்ளனர். தொண்டர்கள் எவரும் அவர்கள் பின்னால் இல்லாததால், வரும் 24ம் தேதி ஜெ., பிறந்த நாள் விழா மற்றும் புதிய ஆட்சி அமைத்ததற்கும் மற்றும் பட்ஜெட் விளக்க நிகழ்ச்சிகளை எப்படி நடத்துவது என புரியாமல் புலம்பி வருகின்றனர்.

மூலக்கதை