கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம்...அதல பாதாளம்! பருவமழை பொய்த்தால் ஏற்பட்ட சோகம்

தினமலர்  தினமலர்
கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம்...அதல பாதாளம்! பருவமழை பொய்த்தால் ஏற்பட்ட சோகம்

திருப்பூர் ;திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நிலத்தடி நீர் மட்டம், 4.30 மீட்டர் சரிந்துள்ளது.மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் குறித்து, ஒவ்வொரு பருவ மழைக்கு முன்பும், பின்பும், நிலத்தடி நீரியல் பிரிவு மூலம், ஆய்வு செய்யப்படுகிறது. 13 ஒன்றியங்களில் உள்ள கிணறுகள், போர்வெல் "ரேண்டம்' முறையில் தேர்வு செய்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
கடந்த ஆண்டு, திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை ஏமாற்றியது; ஆண்டு சராசரி மழை பொழிவான, 602.45 மி.மீ.,ல், 385.93 மி.மீ.,மட்டுமே பெய்தது. மாவட்டத்தில் அதிக பங்களிப்பு இருக்கும், அக்.,-டிச.,மாதங்களில் பெய்யும் வட கிழக்கு பருவ மழையின் இயல்பான அளவு, 344.02 மி.மீ.,ஆகும். கடந்த ஆண்டு, 199.62 மி.மீ., மட்டுமே பெய்தது.
இதனால், மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த, 2016 ஜன., மாதத்தில், சராசரி நீர் மட்டம், 12 மீட்டர் என்ற அளவில் இருந்தது, தற்போது, 16.30 மீட்டர் என்ற அளவுக்கு, கீழே இறங்கியுள்ளது. வறட்சியான பகுதிகளான அவிநாசி, ஊத்துக்குளி பகுதிகளில், 7.20 மீட்டர் வரை, நீர்மட்டம் சரிந்துள்ளது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு, 38 சதவீதம் குறைந்தது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. மாவட்டத்தில், பரவலாக உள்ள கிணறுகள், போர்வெல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவற்றின் இயல்பான நீர் மட்டத்தில் இருந்து, ஒவ்வொரு பருவ மழைக்கு முன்பும், பின்பும் நீர் மட்டம் அதிகரிப்பு, குறைவது ஆய்வு செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக, 12 மீட்டர் என்ற அளவில் இருந்தது. இந்தாண்<டு, 16.30 மீட்டர் ஆக சரிந்துள்ளது. கிராம குடிநீர் திட்டங்கள், கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், கோடையில் கடும் சிரமம் ஏற்படும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பொய்த்து வருகிறது. பல பகுதிகளிலும், நிலத்தடி நீர் மட்டம், 1,500 அடிக்கு கீழ் சென்று விட்டது. அப்படியே "போர்' போட்டலும், தண்ணீர் மிகமிக குறைவாக வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் விவசாயத்தை கைவிட முடிவு செய்துள்ளோம்,' என்று வேதனையுடன் குறிப்பிட்டனர்.

மூலக்கதை