விவசாயிகள், ஜல்லிக்கட்டு விஷயத்தில் வாய்மூடி இருந்துவிட்டு விளம்பரத்துக்காக திடீர் ஆதரவு தெரிவிக்கும் நடிகர்களுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விவசாயிகள், ஜல்லிக்கட்டு விஷயத்தில் வாய்மூடி இருந்துவிட்டு விளம்பரத்துக்காக திடீர் ஆதரவு தெரிவிக்கும் நடிகர்களுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை - ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு திடீரென ஆதரவு தெரிவிக்கும் நடிகர்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கூறியதாவது: தமிழர்களின் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றோம்.

இந்தப் போராட்டத்துக்கு நடிகர்கள் திடீரென்று ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுகின்றனர். சிலர் நேரிலும் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.

நேற்றுவரை பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களது விழாக்களில் கலந்து கொண்ட நடிகர்களும் இப்போது போராட்டத்துக்கு திடீர் ஆதரவு தெரிவிக்கின்றனர். சங்க கட்டிடம் கட்ட விளையாட்டு போட்டிகள், நாடகம் நடத்தி மக்களிடம் பணம் வசூலித்தவர்கள், விவசாயிகளுக்காகவும், ஜல்லிக்கட்டுக்காகவும் ஒரு மாதத்துக்கு முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கலாமே.

நடிகர்கள், எங்களது போராட்டக் களத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு விளம்பரத்துக்காக வந்து போவதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

எங்களுக்கு உண்மையிலேயே ஆதரவு தருவதாக இருந்தால் அவர்கள் போராட்டக்களத்தில் நேரடியாக எங்களோடு இணைய வேண்டும். அப்படி போராடுவதாக இருந்தால் மட்டுமே எங்களை சந்திக்க நடிகர்கள் வரவேண்டும்.

விளம்பரத்துக்காக வந்து செல்லக்கூடாது. அவ்வாறு வருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நடிகர்களது எந்த ஆதரவும் எங்களுக்குத் தேவையில்லை. இது விவசாயிகள், தமிழர்களின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்துக்கு எதிரான தாக்குதலை கண்டிக்கும் போராட்டம்.

இதை மாணவர்களாகிய நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இனிமேலாவது பணத்துக்காக கண்டபடி நடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

இனி வரும் காலங்களில் இந்தப் போராட்டம் வேறு வகையிலும் திரும்பலாம் என்று நடிகர்களை நாங்கள் எச்சரிக்கிறோம்.

இவ்வாறு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை