அரபு வசந்தம், மல்லிகைப் புரட்சி போல இந்தியாவை அதிர வைக்கும் தமிழகத்து "கார்த்திகைப் பூ" புரட்சி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அரபு வசந்தம், மல்லிகைப் புரட்சி போல இந்தியாவை அதிர வைக்கும் தமிழகத்து கார்த்திகைப் பூ புரட்சி!

சென்னை: உலக நாடுகளை உலுக்கிய மல்லிகை புரட்சி, அரபு வசந்தம் போல இந்திய துணைக் கண்டத்தில் ஒரு தேசிய இனத்தின் பண்பாட்டு உரிமையை பாதுகாக்கும் அறவழிப் போராக தமிழகம் தொடங்கி வைத்திருக்கிறது 'கார்த்திகை பூ' புரட்சியை!

துனிசியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் வெடித்தது.. அந்த நாட்டின் தேசிய மலரான மல்லிகைப் பூவின் பெயரால் மல்லிகை புரட்சி என சரித்திரம் எழுதியது. இப்போது இந்திய துணைக் கண்டத்தில் தமிழ்த் தேசிய இனம் தன்னுடைய பண்பாட்டு உரிமையை மீட்பதற்காக பெரும் புரட்சியை தொடங்கி வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டின் தேசிய மலர் செங்காந்தள் மலர் எனப்படும் கார்த்திகை பூ (கண்வலி கிழங்கு செடி பூ). தமிழீழத்தின் தேசிய மலரும் இந்த கார்த்திகை பூதான்.

துனீசியாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அரசியல் உரிமை கோரி போராடி மல்லிகைப் புரட்சி கண்டனர்.. இதோ தமிழகத்துக்கு மாணவர்கள் பல லட்சம் பேர் வீதிக்கு வந்து போராடுவதை ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என சுருக்கிவிடாமல் "கார்த்திகை பூ" புரட்சியாக அழைப்போம்.

துனீசியா மற்றும் அரபுநாடுகளைப் போலவே சமூக வலைதளங்களையே பிரசார ஆயுதமாக்கி வரலாறு படைத்துக் கொண்டிருக்கின்றனர் தமிழகத்தின் இளைய சமூகம். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னரே இந்தி திணிப்பை எதிர்த்து தாளமுத்து, நடராசன் தொடங்கி ஆயிரமாயிரம் பேர் அறவழிப் போரில் மாண்டு போன மண் தமிழகத்துக்கு மண்.

நாடு விடுதலை அடைவதற்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரில் திருச்சியில் இருந்து கால்நடையாக பெரும் இளைஞர்கள், பெண்கள் படையை சென்னை நோக்கி திரட்டி வந்தார் நகரதூதன் ஏட்டின் ஆசிரியராக இருந்த மணவை ரெ. திருமலைசாமி. இந்த பெரும்படை சென்னை நோக்கி வந்த போது அதன் தளகர்த்தர்கள் பலரும் நடுவழியிலேயே நோய் தாக்கி, இயற்கை தாக்க்கி, ஆற்றை கடந்து வருகையில் என மாண்டுபோயினர்.

ஆனால் சென்னை மெரினாவில் கூடிய பெரும்படையின் மாநாட்டில் தான் நாடு விடுதலை அடைவதற்கு முன்னரே 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை தந்தை பெரியார் பிரகடனம் செய்தார்.

நாடு விடுதலை அடைந்த பின்னர் இந்தியாவின் அரசியல் சாசனத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வர பெரும் போராட்டங்களை நடத்திய மண் தமிழகத்து மண்தான். மீண்டும் இந்தி திணிப்பு வந்தபோது அதை எதிர்த்து தேக்குமர தேகங்களை தீக்கிரையாக்கிய விருகம்பாக்கம் அரங்கநாதன் முதலானோரை படைத்ததும் தமிழகத்து மண்தான்.

தமிழீழ விடுதலைக்காக முதன் முதலாக தமிழகத்து மண்ணில் தீக்குளித்தது அப்துல் ரவூப் எனும் இளைஞர்தான். 7 தமிழர் விடுதலைக்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் தீக்குளித்தது செங்கொடி. இப்படி இந்திய துணைக் கண்டத்தில் தங்களது இன உரிமைகளுக்காக தம்மை வற்புறுத்தி தங்களையே தீக்கிரையாக்கி தங்களையே ஆயுதமாக்கி போராடிய ஒரே இனம் தமிழ் இனம் மட்டுமே.

இப்போது ஏறுதழுவுதல் எங்கள் பண்பாட்டு உரிமை; அதை தடுக்க எவருக்கும் இல்லை உரிமை எனும் முழக்கத்துடன் சமூக வலைதளங்களையே பிரசார களமாக்கி தங்களையே ஆயுதமாக்கி அமைதிஅறவழி புரட்சியில் ஈடுபட்டுள்ளது தமிழகத்து இளைஞர் சமூகம். 21-ம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட முதல் புரட்சி இது.

சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள் வங்கக் கடலை விழுங்கிய ஆழிப்பேரலையாக திரண்டுள்ளனர். தமிழகத்துக்கு நகரத்து மைதானங்கள் எல்லாம் போர்க்கள மையங்களாகிவிட்டன. வீதிகள் தோறும் போர்க்கோலங்கள்.. முழக்கங்கள்..

ஆம்

இந்தியாவின் பிற தேசிய இன மக்கள் அமைதிவழியில் தங்களது பண்பாட்டு உரிமை மீட்பு போராட்டத்துக்கு எப்படி ஆர்த்தெழ வேண்டும் என வழிகாட்டியிருக்கிறது தமிழகத்து 'கார்த்திகை பூ' புரட்சி என்பது நிதர்சனம்!

மூலக்கதை