துபாய் பொங்கல் கொண்டாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த தமிழர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
துபாய் பொங்கல் கொண்டாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த தமிழர்கள்

துபாய்/மஸ்கட்: துபாயில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தின்போது தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

துபாய் வாழ் தமிழ் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கலாச்சார முறைப்படி கோலம் போட்டு, புது பானையில் பொங்கலிட்டு, குலவை இட்டு, கும்மி அடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதில் கயிறு இழுத்தல், பம்பரம் விடுதல், பிள்ளையார் பந்து, சில்லெறிதல், பாண்டியாட்டம், குச்சி விளையாட்டு என பல விதமான பாரம்பரிய விளையாட்டுகளை பெரியவர்களும் குழந்தைகளும் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தனர்.

கூடுதல் சிறப்பாக நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் மீதான தடையை கண்டித்தும், ஜல்லிக்கட்டின் அவசியத்தின் வாசகங்களை கையில் ஏந்தியும் தம் ஆதரவையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தினர்.

மஸ்கட்

துபாயை போன்றே மஸ்கட்டிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.

மஸ்கட்வாழ் தமிழ் குடும்பங்கள் பங்கேற்ற 'பொங்கல் சங்கமம்' பொங்கல் திருவிழா நிகழ்ச்சி மஸ்கட்டில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவில் திரு. சுரேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். கவிஞர். மு.பஷீர் பொங்கல் விழா பற்றி தலைமை உரையாற்றினார்.

விழாவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் கண்ணுக்கும், காதுக்கும் விருந்தாக அமைந்தன. குடும்பத்தின் ஏற்றத்துக்கும், மகிழ்ச்சிக்கும் பெரிதும் துணையாக இருப்பது கணவனா? மனைவியா? எனும் தலைப்பில் கவிஞர். மு.பஷிர் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம் நகைச்சுவையும், கருத்துச் செறிவும் மிக்கதாக அமைந்தது.

மூலக்கதை