அலை கடலென அணி அணியாய்… பொங்கும் மாணவர் கூட்டம்.. கொந்தளிக்கும் மெரினா போராட்டம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அலை கடலென அணி அணியாய்… பொங்கும் மாணவர் கூட்டம்.. கொந்தளிக்கும் மெரினா போராட்டம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று கோரியும் நேற்று காலை 7 மணி முதல் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசியல் சார்பற்ற முறையில் மாணவர்கள் மட்டுமே ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை தொடங்கினார்கள். வெறும் 300 பேருடன் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் இப்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வந்து தங்களுக்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்ட மாணவர்கள் கூறி இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டதால், அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இன்று மெரினாவிற்கு வந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அம்பேத்கர் சட்டக்கல்லூரி, லயோலா கல்லூரி, தனியார் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இன்று காலை பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் பேருந்துகளிலும், இரு சக்கர வாகனங்களில் மெரினாவிற்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். சில மாணவர்கள் அரசு பேருந்தின் மேல் ஏறி பீட்டாவிற்கும் எதிராக பேனர்களை ஏந்தி கோஷமிட்டபடி போராட்டத்திற்கு வந்தனர்.

போராட்டத்தில் "சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ் எங்கம்மா" "தடை செய்.. தடை செய்.. பீட்டாவை தடை செய்" "வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு வகையான கோஷங்களை எழுப்பி மாணவர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

பாரதிதாசன் சிலை அருகில் வெறும் 300 பேருடன் கூடிய கூட்டம் இன்று தற்போது மாநில கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட காந்தி சிலை வரை நீண்டுள்ளது. மாணவர்கள் அணி அணியாய் வர வர கடற்கரை சாலையின் நடைபாதையில் வரிசையாக கட்டுக் கோப்புடன் அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

 

 

இந்தப் போராட்டத்தில் எல்லா கல்லூரியில் இருந்தும் வந்துள்ள மாணவிகள் கலந்து கொண்டு பீட்டாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பேனர்களை ஏந்தி தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். சிலர் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே இடத்தில் குவிந்தாலும், ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடைபெறாத வண்ணம் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டின் உரைகள் கீழே போடப்பட்டிருந்தது. அதனை அங்கிருந்து மாணவர்கள் சிலர் அப்புறப்படுத்தி ஓரமாக போடுகின்றனர். பல மாணவர்கள் தாமாகவே முன் வந்து போராடும் மாணவர்கள் சாலைக்கு வந்துவிடாதபடியும் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுவிடாதபடியும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மெரினா கடற்கரையில் காந்தி சிலை முதல் கண்ணகி சிலை வரை மாணவர்கள் கூட்டம் கடல் அலை போல் கூடியுள்ளதால் இந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐஸ் அவுஸ், லாயிட்ஸ் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, பாரதி சாலை என கடற்கரையை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை