முதியவர்களுக்கு முற்றிலும் இல்லை பாதுகாப்பு... முதுமையில் தனிமை; கோவையை மிரட்டும் கொடுமை! தனித்திருப்போர் குறித்து போலீசார் தகவல் சேகரிப்பு!

தினமலர்  தினமலர்
முதியவர்களுக்கு முற்றிலும் இல்லை பாதுகாப்பு... முதுமையில் தனிமை; கோவையை மிரட்டும் கொடுமை! தனித்திருப்போர் குறித்து போலீசார் தகவல் சேகரிப்பு!

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று பெயர் பெற்றுள்ள கோவை நகரில், பிள்ளைகளால் கைவிடப்பட்டு, தனித்து வாழும் முதியோருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது; இதனால், முதியோரை பாதுகாப்பதற்கான புதிய திட்டத்தை வகுத்து, கணக்கெடுப்புப் பணியில் மாநகர காவல்துறை இறங்கியுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே கோவை நகரில் தான், பள்ளிக்குச் சென்ற அக்கா, தம்பி என இரு குழந்தைகள், பாலியல் துன்புறுத்தலுக்குப் பின், கொல்லப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. அதில் தொடர்புடைய குற்றவாளி ஒருவன், சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த காலகட்டத்தில், பெண் கடத்திக்கொலை, பெண் போலீஸ் கற்பழிப்பு என பல்வேறு சம்பவங்களால், கோவை நகரமே, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமோ என்ற அச்சம் உருவானது.இணைந்த கரங்கள்...ஆனால், அடுத்தடுத்து காவல்துறையினரும், சமூக அமைப்பினரும் இணைந்து மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள், கோவை நகரில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக்கொடுத்தன. அதன் விளைவாக, தற்போது இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்ற பெருமையை, கோவை பெற்றுள்ளது. டில்லியிலுள்ள தேசிய குற்ற ஆவணக்காப்பகம், இதற்கான ஆதாரமாகவுள்ளது.இப்படியொரு பெருமை கிடைக்கும் இதே காலகட்டத்தில், முதியோருக்கு பாதுகாப்பும், ஆதரவும் இல்லாத நகரமாக கோவை மாறி வருகிறதோ என்ற சந்தேகமும் புதிதாக முளைத்துள்ளது. சமீபகாலத்தில் நடந்துள்ள பல்வேறு சம்பவங்கள், இந்த சந்தேகத்தையும், அச்சத்தையும் மேலும் வலுப்படுத்துவதாக உள்ளன.கோவை, காந்திபுரம், முதலாவது வீதி விரிவாக்கம் பகுதியை சேர்ந்த பழனியப்பன் மனைவி பழனியம்மாள், 85. கணவர் உயிரிழந்த நிலையில், மகளின் பராமரிப்பில், தனி வீட்டில் பழனியம்மாள் வசித்து வந்தார். கடந்த மாதம், மணிப்பூரை சேர்ந்த 23 வயது வாலிபர், நகைக்காக மூதாட்டியை கொலை செய்தான். இதில், மூதாட்டியை பாலியல் துன்பறுத்தல் செய்ததும், பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.இதேபோன்று, ரோடுகளில் தனியாக நடந்து செல்லும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை வழிமறித்து, அறிவுரை கூறுவது போல் நடித்து, நகை பறிக்கும் சம்பவங்களும் அதிகளவு நடந்து வருகிறது. தனித்து வாழும் முதியோர் சிலரை மிரட்டி, சொத்துக்களைப் பறிக்கும் கொடுமையும், சத்தமின்றி நடந்து வருவதாக 'பகீர்' தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.தனித்திருந்தால் சொல்லுங்க...இதனை தடுக்க, மாநகர போலீஸ் எல்லைக்குள் தனியாக வசிக்கும், முதியவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த, 'பீட்' போலீசாருக்கு சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார். அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள 'பீட்' போலீசார், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில், தனியாக வசிக்கும் முதியவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:கோவை மாநகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட பல்வேறு இடங்களில், வயதான முதியவர்கள் வசித்து வருகின்றனர். இவ்வாறு தங்கியுள்ளவர்கள், யார் உதவியும் இல்லாமல், தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.இவர்கள், பொருட்களை வாங்க ரோட்டில் செல்லும்போது, தொடர்ந்து கண்காணிக்கும் வழிப்பறி கொள்ளையர்கள், அவர்கள் அணிந்திருக்கும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகளவு நடந்து வருகிறது.மகன் அல்லது மகளை பிரிந்து தனியாக வசிக்கும் முதியவர்கள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து, அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்; முதியவர்களுக்கு செய்யும் கடமையை சேவையாக நினைத்து செய்ய வேண்டும்; என, 'பீட்' போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற முதியவர்களின் விபரங்கள், மொபைல்போன் எண்ணுடன் சேகரிக்கப்படுகிறது.சேகரிக்கப்படும் முதியவர்களின் விபரங்கள் ஒருங்கிணைக்கப்படும். 'பீட்' போலீசார் தங்கள் பகுதிகளில் வசிக்கும் முதியவர்களை, தினந்தோறும் சந்தித்து பேசவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.உண்மையில், இது காவல்துறையின் கடமையாக இல்லாவிட்டாலும், மனித நேயத்தோடு எடுக்கின்ற நல்ல முயற்சியாகும். மாநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு, சமூக அமைப்புகளும், குடியிருப்போர் நலச்சங்கங்களும் கை கொடுத்தால், கோவை மாநகரம், உண்மையில் அனைவருக்கும் பாதுகாப்பான, இனிய நகரமாக மாறுவது உறுதி.

-நமது நிருபர்-

மூலக்கதை