அகிலேஷை எதிர்த்து தந்தை முலாயம் சிங் போட்டி.. உபி தேர்தலில் பரபரப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அகிலேஷை எதிர்த்து தந்தை முலாயம் சிங் போட்டி.. உபி தேர்தலில் பரபரப்பு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் மகனும் அம்மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவை எதிர்த்து அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் போட்டியிடப் போவதாக அவர் கட்சித் தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ் வாடி கட்சி குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டாக பிளந்துள்ளது. இதனையடுத்து கட்சியின் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

அதே வேளையில், அம்மாநில முதல்வரும் மகனுமான அகிலேஷ் யாதவ் போட்டியிடும் தொகுதியில் தானும் போட்டியிடப் போவதா முலாயம் சிங் யாதவ் கட்சித் தொண்டர்களிடம் கூறியுள்ளார். அகிலேஷ் யாதவிடம் பல முறை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டாலும் அதனை உணர அவர் மறுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ள முலாயம் சிங், கட்சியின் முக்கிய தலைவர்களை அகிலேஷ் மிகவும் புண்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அகிலேஷ் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக சமாஜ்வாடி கட்சியை மாற்றி வருகிறார் என்றும், கட்சியை காப்பாற்ற தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டதாகவும் முலாயம் கூறியுள்ளார். எந்த விதமான பிரிவினைவாதமும் சமாஜ்வாடி கட்சி அழிக்க அனுமதிக்க மாட்டேன் என்று அவர் உறுதி கூறியுள்ளார்.

இதனிடையே, சைக்கிள் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதற்காக அகிலேஷ் மற்றும் முலாயம் சிங் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை சின்னம் முடக்கப்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து இரண்டு பிரிவுகளும் முடிவெடுத்து வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை