திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமியன்று 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதியுலா - தலைமை செயல் அலுவலர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமியன்று 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதியுலா  தலைமை செயல் அலுவலர் தகவல்

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் பிப்ரவரி 3ம் தேதி ரதசப்தமி நடைபெற உள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ரதசப்தமி உற்சவத்தின்போது ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தினந்தோறும் காலை, மாலை என 18 வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதில் சூரிய ஜெயந்தியான ரதசப்தமியன்று ஒரேநாளில் 7 வாகனங்களில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ரதசப்தமியான 3ம் தேதியன்று அதிகாலை 5. 30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாடவீதியில் வடமேற்கு பகுதியில் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் படுவதற்கு காத்திருக்க உள்ளார்.

இதையடுத்து, சூரிய உதயத்திற்கு பின் ெதாடர்ந்து நான்கு மாடவீதியில் வீதியுலா வர உள்ளார்.

காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை வராக சுவாமி கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தமும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். மேலும், ரத சப்தமியையொட்டி கோயிலில் நடக்க உள்ள ஆர்ஜித சேவைகளான நிஜபாத தரிசனம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல், வசந்த, கல்யாண உற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை