ஜல்லிக்கட்டு தில்லு இருந்தா 'மல்லுக்கட்டு'

தினமலர்  தினமலர்
ஜல்லிக்கட்டு தில்லு இருந்தா மல்லுக்கட்டு

மதுரை: 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது சான்றோர் வாக்கு. தமிழனின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாள் ஜன.,14ல் ஆண்டு தோறும் பாரம்பரியமாக நடக்கிறது.
ஜன.,16ல் நடக்கும் உலகப்புகழ் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழா துவங்குவதற்கு முன் மாடு பிடி வீரர்கள் தங்களையும், தங்களின் முரட்டுக் காளைகளையும் போட்டியில் பங்கு பெற செய்வதற்காக மாதக்கணக்கில் பயிற்சியில் ஈடுபடுவர். ஆடுகளத்தில் மாடுபிடி வீரர்களுடன் நின்று விளையாட வேண்டும் என்பதற்காக, காளைகளுக்கு நீச்சல் பயிற்சியும், உடல் ஆரோக்கியத்துக்கு இயற்கை சத்துணவுகளும் வழங்குவர்.
களத்தில் நின்று விளையாடும் காளைகள், கட்டிளம் வீரர்களை தனது மிரட்டும் பார்வையால் விரட்டியும்... கூர்மையான கொம்புகளை பக்கவாட்டில் ஆட்டிக்காட்டியும்... 'ஓடி விடு... குத்திப்புடுவேன்' என பயமுறுத்தும் கொள்ளை அழகை காண கண் கோடி வேண்டும். வாடி வாசலில் இருந்து துள்ளிக்குதித்து, சீறிப்பாய்ந்து வரும் முரட்டுக் காளையை பிடிக்க வீரர்களுக்குள் தள்ளுமுள்ளு நடக்கும்.
கண் இமைக்கும் அந்த நொடிப்பொழுதை தனது புத்திக்கூர்மையால் கிரகிக்கும் காளை... வீரர்களுக்கு போக்குக்காட்டும். உடலை சிலிர்த்தும்... வாலை வளைத்து உயரே துாக்கி... சிவந்த கண்களை கோபமாக உருட்டிக்காட்டி... ஆடுகளத்தை விட்டு அலேக்காக 'எஸ்கேப்' ஆக தயாராகும்.அப்போது ''சூப்பர் காளையப்பா... சூப்பர்... சூப்பர்... நின்னு விளையாடுதுப்பா... பிடிச்சுப்பாரு... தில்லு இருந்தா... பிடிச்சுப்பாரு,'' என நடுவர் குழுவினர் மாடு பிடி வீரர்களை உசுப்பேற்றுவர். எனினும் அந்த முரட்டுக்காளை வீரர்களிடம் சிக்காமல் ஆடுகளத்தை விட்டு ஓடிவிடும். ''இது பிடி மாடு இல்லப்பா... மாட்டுக்காரர் யாருப்பா...? இந்தா தங்கக்காசு... சைக்கிள், பீரோ... டூவீலர்...'' என பரிசுகளை நடுவர் குழுவினர் வாரி வழங்குவர்.
மாடு பிடி வீரர் ஒருவர் காளையிடம் அத்துமீறினால் ஆடுகளத்திலேயே வீரரின் பனியன் அவிழ்க்கப்பட்டு சம்பவ இடத்திலேயே வெளியேற்றப்படுவார். எனவே காளையை அடக்குவதில் வீரர்கள் எல்லை மீறுவது தவிர்க்கப்பட்டது. தமிழர்களால் வாழையடி வாழையாக போற்றி கொண்டாடி வரும் பாரம்பரியமிக்க கலாசாரத்தின் அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டது துரதிர்ஷ்டம்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு எங்கு நடந்தாலும் பங்கேற்கும் மதுரை ஜல்லிக்கட்டு வீரர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்களில் சீருடை அணிந்து மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
'ஜல்லிக்கட்டு தடை என்பது தற்காலிகம் தான். தமிழனின் வீர விளையாட்டை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. அது தெய்வத்துடன், தமிழனின் உணர்வு, உயிருடன் இரண்டர கலந்தது. காளைகளை குலத்தெய்வமாக வணங்கும் பாரம்பரியம் தமிழனிடம் மட்டுமே உள்ளது.ஊர் சார்பில் நேர்ந்து விடப்படும் 'சுவாமி' காளைகள் மரணத்திற்கு பின் கோயில் எழுப்பி வழிபடும் பண்பாடும் உலகில் வேறெந்த இனத்திலும் இல்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை என்பது மடை திறந்த வெள்ளம் போல் எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என பொறுமையாக இருக்கிறோம். எதற்கும் ஒரு எல்லையுண்டு என்பதை காலம் சொல்லும்,' என்கின்றனர் காளையர்.
மாடுபிடி வீரர் ஒருவர் காளையிடம் அத்துமீறினால் ஆடுகளத்திலேயே வீரரின் பனியன் அவிழ்க்கப்பட்டு சம்பவ இடத்திலேயே வெளியேற்றப்படுவார். எனவே காளையை அடக்குவதில் வீரர்கள் எல்லை மீறுவது தவிர்க்கப்பட்டது.

மூலக்கதை