"பொங்கும்' உற்சாகம்! களை கட்டிய பொங்கல் பண்டிகை... தொழிலாளர் சொந்த ஊருக்கு பயணம்

தினமலர்  தினமலர்
பொங்கும் உற்சாகம்! களை கட்டிய பொங்கல் பண்டிகை... தொழிலாளர் சொந்த ஊருக்கு பயணம்


திருப்பூர் : தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் பானைகள், கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை, திருப்பூரில் களை கட்டியுள்ளது.
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவான, பொங்கல் பண்டியை துவங்கியுள்ளது. பண்டிகையை வரவேற்கும் விதமாக நேற்று, கடைகள், வணிக நிறுவனங்கள், கம்பெனிகளில், வேப்பிலை, பூளைப்பூ ஆகியவற்றை கொண்டு, காப்பு கட்டப்பட்டது. முதல் நாளான இன்று, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வீட்டு வாசலில் மாக்கோலமிட்டு, புது அரிசி, புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
இதற்காக, புதிய மண் பானை, அரிசி, கரும்பு, வெல்லம் என பொங்கல் பொருட்கள் வாங்க, மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காய்கறிகள் அதிகமாக பயன்படுத்தி உணவு தயாரிப்பதற்காக, தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம் மார்க்கெட், உழவர் சந்தைகளில் மக்கள் அதிகளவு காணப்பட்டனர். திருப்பூர் ரோடுகளின் பல இடங்களில், கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை ஜோராக நடைபெற்றது.
நாளை, உழவுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக, மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. விவசாய நிலங்கள், தோட்டத்து சாளைகளில் பொங்கல் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாடுகள் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் அடிக்கும் பணிகளும் நடைபெற்றுள்ளது. நாளை மறுநாள், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தொழிலாளர் பயணம்!திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களில், மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், திண்டுக்கல் என, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள், தீபாவளி, பொங்கல் விழாக்களின் போது, சொந்த ஊர்களுக்கு சென்று, பண்டிகை கொண்டாடிவிட்டு திரும்புகின்றனர்.
வழக்கமாக சனிக்கிழமை சம்பளம் வழங்கும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நேற்று சம்பளம் வழங்கி, மதியம் முதல் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துவிட்டன. வரும், 16ம் தேதி வரை, தொழிலாளர்களுக்கு பொங்கல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள், வெள்ளிக்கிழமையே சம்பள தொகையை வழங்கிவிட்டன. சம்பளம் பெற்ற தொழிலாளர்கள், நேற்று முன்தினம் இரவு முதல், பஸ், ரயில்களில் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களை நோக்கி புறப்பட்டனர்.
பொங்கலுக்கு செல்லும் தொழிலாளர், பணிக்கு திரும்புவதற்கு ஒரு வாரம் முதல் பத்து நாட்களாகிவிடும். என்றாலும், வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ளதால், அவர்களைக்கொண்டு, ஆடை உற்பத்தி பணிகளை தொடர தொழில் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், ""பண பரிவர்த்தனை, தற்போது சீராகி வருகின்றன. ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வசம் ஏராளமான ஆர்டர்கள் உள்ளன. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரம் வரை விடுமுறை அளிக்கப்படும். ஆர்டர்களை முடிக்க வேண்டிய அவசர சூழல் உள்ளதால், மூன்று நாட்களே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

மூலக்கதை