ரிப்பன் மாளிகை கழிப்பறைக்கு குடிநீர் அநியாயம் தினமும் 1 லட்சம் லிட்டர் வீணடிப்பு

தினமலர்  தினமலர்
ரிப்பன் மாளிகை கழிப்பறைக்கு குடிநீர் அநியாயம் தினமும் 1 லட்சம் லிட்டர் வீணடிப்பு

குடிக்க பயன்படுத்தும் நீரை, நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சம் லிட்டர் வீதம், கழிப்பறைக்கு பயன்படுத்தும் கொடுமை, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடக்கிறது.பருவ மழை ஏமாற்றி உள்ள நிலையில், சென்னையில், இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுகிறது. குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு கவலை அளிக்கும் வகையில் இருப்பதால், இம்மாத இறுதிக்குள், குடிநீர் பஞ்சம் தலைவிரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.இதனால் சென்னை குடிநீர் வாரியம், தற்போதே குடிநீர் வினியோக அளவை, பாதியாக குறைத்து விட்டது. ஏரிகள் வறண்டு போகும் பட்சத்தில், விவசாய கிணறுகளில் இருந்தும், கடல்நீரையும் குடிநீராக்க வாரிய அதிகாரிகள் மும்முரம் காட்டுகின்றனர்.அறிவுரைஅப்போதும் தேவையை சமாளிக்க முடியாது என்ற நிலையில், சென்னை குடிநீர் வாரியம் வினியோகிக்கும் நீரை, மக்கள் குடிக்கவும், சமைக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; இதர தேவைகளுக்கு ஆழ்துளை குழாய்கள், கிணறுகள் மூலம் எடுக்கப்படும் நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டும்; நீரை, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்; ஒழுகும் குழாய்களை பழுது பார்க்க வேண்டும் என, உள்ளாட்சித்துறை அமைச்சர், சென்னை மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி, நீண்ட பட்டியலே வெளியிட்டார்.குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வாரியமும், உள்ளாட்சித்துறை நிர்வாகமும், இப்படி அல்லாடிக் கொண்டிருக்க, சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில், குடிக்க பயன்படுத்தும் குடிநீர் வாரிய நீரை, நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சம் லிட்டர் வீதம், கழிப்பறைக்கு பயன்படுத்தி வீணாக்கும் அவலம் நடக்கிறது.ரிப்பன் மாளிகை வளாகத்தில், பிரதான கட்டடம், அம்மா மாளிகை மற்றும், 10க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த அலுவலகங்களில் குடிக்க, 'கேன்' வாட்டர் பயன்படுத்துகின்றனர்.கழிப்பறைக்கும், அதிகாரிகளின் வாகனங்களை கழுவுவதற்கும், இதர பயன்பாடுகளுக்கும், சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரையே பயன்படுத்துகின்றனர்.இதற்காக ரிப்பன் மாளிகை வளாகத்தில், கீழ்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டிகளில், குடிநீர் வாரிய குழாய் மூலம் பெறப்பட்டுள்ள இணைப்பில், தண்ணீர் நிரப்பப்படுகின்றன. இந்த வகையில், ரிப்பன் மாளிகைக்கு, நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சம் லிட்டர் நீர் செலவிடுகின்றனர். குடிநீர் இணைப்பு மூலம் கிடைக்கும் நீர் போதாத பட்சத்தில், 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில், தினசரி இரண்டு முறை கூடுதலாக வாரியத்திடம் இருந்து நீர் பெறப்படுகிறது.கார் கழுவவும்மக்கள், குடிக்கவே தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் நிலையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, மாநகராட்சி அதிகாரிகள், கழிப்பறைக்கும், கார் கழுவவும் பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆழ்துளை குழாய் உள்ளது. இதை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டு, குடிநீர் வாரியத்திடம் நீரை பெற்று, மாநகராட்சி பயன்படுத்துகிறது.இந்நிலையில், குடிக்கவும், சமைக்கவும் மட்டும், வாரியத்தின் நீரை பயன்படுத்த வேண்டும்; இதர தேவைகளுக்கு நிலத்தடி நீரை தான் பயன்படுத்த வேண்டும் என, அமைச்சர் வேலுமணி கூறியது, பொதுமக்களுக்கு மட்டும் தானா, மாநகராட்சி நிர்வாகத்திற்கு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- நமது நிருபர் -

மூலக்கதை