சுங்கவரி பற்றி முதல்–அமைச்சரிடம் புகார் அளிக்க வந்த நடைபாதை ...

தினத்தந்தி  தினத்தந்தி
சுங்கவரி பற்றி முதல்–அமைச்சரிடம் புகார் அளிக்க வந்த நடைபாதை ...

தாம்பரம்,

சுங்கவரி பற்றி முதல்– அமைச்சரிடம் புகார் அளிக்க வந்த நடைபாதை வியாபாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் காய்கறி மார்க்கெட்

சேலம் மாநகர் பகுதியில் உள்ள ஆனந்த இறக்கம் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள நடைபாதைகளில் ஏராளமானோர் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். அந்த நடைபாதை வியாபாரிகளிடம் சுங்கவரி கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க அரசு அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

எனவே இது தொடர்பாக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க நடைபாதை வியாபாரிகள் முடிவு செய்தனர். இதற்காக 52 பெண்கள் உள்பட 150 நடைபாதை வியாபாரிகள் 2 பஸ்களில் சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்தனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

ஆனால் அவர்கள் முதல்– அமைச்சரை சந்திக்க உரிய அனுமதி வாங்காததாலும், சட்டமன்ற கூட்டம் நடை
பெறுவதால் அசம்பாவிதங் களை தவிர்க்கவும் 2 பஸ்களில் வந்த நடைபாதை வியாபாரிகளை பெருங்களத்தூரில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவர்களை சிட்லபாக்கத்தில் உள்ள சமூக நல கூடத்தில் தங்க வைத்தனர். அப்போது போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.  நடைபாதை வியாபாரிகள் சுங்கவரி கட்டணத்தை ரத்துசெய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

மனுவை அளித்தனர்

தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு, தங்கள் பகுதியில் 3 மடங்கு சுங்கவரி கட்டணம் வசூலிப்பதாகவும் இதை தடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை முதல்–அமைச்சர் காப்பாற்ற வேண்டும் எனவும் நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பின்னர் நடைபாதை வியாபாரிகளின் பிரதிநிதிகள் 5 பேர் தலைமைச் செயலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 5 பேரும் தலைமைச் செயலகம் சென்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். 

மூலக்கதை