சாதி சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு பெற்றோர்களுடன் வந்த மாணவ, மாணவிகள்

தினத்தந்தி  தினத்தந்தி
சாதி சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு பெற்றோர்களுடன் வந்த மாணவ, மாணவிகள்

சாதி சான்றிதழ் கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு பெற்றோர்களுடன் மாணவ, மாணவிகள் வந்தனர். இதுதொடர்பாக அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சாதி சான்றிதழ்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா கொண்டையம்பள்ளி, மூலப்புதூர், தகரபுதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் 40-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை பெற்றோர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

மாணவ, மாணவிகள் அனைவரும் ‘இந்து அம்பலக்காரர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வேண்டும்‘ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர். பின்னர் மாணவர்கள் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர். அந்த மனுவில், ‘எங்கள் சமூக மக்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இந்து அம்பலக்காரர் என்று சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

வழங்க மறுப்பு

ஆனால் தற்போது புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு அதிகாரிகள் இந்து அம்பலக்காரர் என சாதி சான்றிதழ் தர மறுக்கிறார்கள். இதனால் அரசின் சலுகைகளை பெறுவதிலும், உயர்க்கல்விக்கு செல்வதிலும் எங்களது குழந்தைகளுக்கு பெரிதும் இடையூறாக இருக்கிறது. எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி இந்து அம்பலக்காரர் என்று சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்காடு உள்ள கொண்டையானூர் பகுதியை சேர்ந்த முதியவர்கள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். இதில், ‘எங்கள் கிராமத்தில் 30 பேருக்கு உதவித்தொகை வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக உதவித்தொகை கிடைக்காமல் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே நிறுத்தப்பட்ட உதவித்தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை