கூடலூர் அருகே இன்று யானை தாக்கி காவலாளி பலி

மாலை மலர்  மாலை மலர்
கூடலூர் அருகே இன்று யானை தாக்கி காவலாளி பலி

கூடலூர், மார்ச்.30–

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானைகள், புலி, காட்டெருமைகள், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிர்ச்சேதமும், உயிர்சேதமும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இருந்த போதிலும் வனவிலங்குகளின் தாக்குதலால் மனித உயிர்கள் பலியாவது தொடர் கதையாகி உள்ளது.

கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 42). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை 6.45 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த காட்டு யானை ராதாகிருஷ்ணனை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ராதா கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் ஓவேலி பகுதியில் குவிக்கப்பட்டனர்.

மூலக்கதை