9 மாத ஆண் குழந்தையை கொன்று தோட்டத்தில் புதைத்த தந்தை

மாலை மலர்  மாலை மலர்
9 மாத ஆண் குழந்தையை கொன்று தோட்டத்தில் புதைத்த தந்தை

பரமத்திவேலூர்,மார்ச். 30–

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கல்லுக்கடைமேடு. இந்த ஊரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 38). விவசாயி. இவருக்கு ஒரு பெண் குழந்தையும், 9 மாத ஆன ஆண் குழந்தையும் உள்ளது.

இந்தநிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு தமிழ்செல்வன் தனது மனைவியை சந்தேகப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்து, உடலை வீட்டில் போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய தமிழ்செல்வனை கண்டுபிடித்து, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அப்போது இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்செல்வன் சிறையில் இருந்த சமயத்தில் 2 குழந்தைகளையும், பரமத்தி பகுதியில் உள்ள அவரது தங்கை பாசமாக வளர்த்து வந்தார்.

இந்த நிலையில், ஜாமீனில் கடந்த வாரம் வெளியே வந்த தமிழ்செல்வன் பரமத்தி பகுதியில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு சென்று என்னுடைய 2 குழந்தைகளையும் தன்னிடம் கொடுக்கும் படி கூறி தகராறில் ஈடுபட்டார்.

மனைவியை கொன்றது போல், 2 குழந்தைகளையும் கொன்று விடக்கூடாது என்ற பயத்திலும், குழந்தைகளுக்கு குறைந்த வயதாக இருப்பதாலும், 2 குழந்தைகளையும் ஒப்படைக்க தங்கை மறுத்து விட்டார்.

இதனால் கோபம் அடைந்த தமிழ்செல்வன் வலுக்கட்டாயமாக, 9 மாத ஆண் குழந்தையை அங்கிருந்து தூக்கிக் கொண்டு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் தமிழ்செல்வனின் தந்தை பொன்னுசாமி அந்த குழந்தையை பார்ப்பதற்காக தமிழ்செல்வனின் வீட்டிற்கு சென்றார். அந்த 9 மாத ஆண் குழந்தையை காணவில்லை.

குழந்தையை காணோம். என்ன செய்தாய்? எங்கே வைத்திருக்கிறாய் என்று பொன்னுசாமி கேட்டார்.

வீட்டில் தான் குழந்தையை வைத்திருந்தேன். ஆனால் குழந்தையை காணவில்லை என்று தமிழ்செல்வன் கூறினார்.

மகனின் பேச்சில் சந்தேகம் அடைந்த பொன்னுசாமி, நீ குழந்தையை கொன்று விட்டாய் என்று கூறி விட்டு, நேராக ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தார்.

புகாரில் பரமத்தியில் வசித்து வரும் எனது மகளிடம் இருந்து ஆண் குழந்தையை மகன் தமிழ்செல்வன் வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு, சென்றார். இதனை நான் கேள்விப்பட்டதும், பேரனை பார்ப்பதற்காக தமிழ்செல்வன் வீட்டிற்கு சென்றேன். அங்கு குழந்தையை காணவில்லை.

மருமகளை கொன்றது போல் பேரக்குழந்தையையும், எனது மகன் தமிழ்செல்வன் கொன்றிருக்கலாம். மகனின் பேச்சில் பலத்த சந்தேகம் உள்ளது. அவரை பிடித்து விசாரித்தால் குழந்தையை என்ன செய்தார்? என கண்டுபிடித்து விடலாம் என கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து, பரமத்திவேலூர் டி.எஸ்.பி.சுஜாதாவுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும், டி.எஸ்.பி.சுஜாதா மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் கல்லுக்கடைமேடு கிராமத்திற்கு விரைந்து சென்று, தமிழ்செல்வனின் வீட்டை பார்வையிட்டனர்.

அப்போது தமிழ்செல்வன் அங்கு இல்லை. தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் ஊர் மக்களிடம், குழந்தை மற்றும் தமிழ்செல்வன் குறித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் கூறிய தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த தமிழ்செல்வனை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்செல்வனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தன்னுடைய 9 மாத ஆண் குழந்தையை கழுத்தை இறுக்கி கொலை செய்து, உடலை நாமக்கல் மாவட்டம் ஜமீன் எலம்பள்ளி அருகே உள்ள தனக்கு சொந்தமான மயிலாடும் பாறை தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து விட்டதாக தெரிவித்தார்.

ஈவு, இரக்கம் இல்லாமல் அந்த பச்சிளம் குழந்தையை துடிக்க துடிக்க கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதை கேட்டதும், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மயலாடும் பாறை தோட்டத்திற்கு தமிழ்செல்வனை அழைத்துச் சென்று எந்த இடத்தில் புதைத்துள்ளாய்? என கேட்டனர். அப்போது தோட்டத்தில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்தை காண்பித்தார்.

இதையடுத்து அரசு மருத்துவர்கள், பரமத்திவேலூர் தாசில்தார் லோகநாதன், டி.எஸ்.பி.சுஜாதா, இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் அந்த இடத்தை தோண்டி குழந்தை உடலை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மூலக்கதை