பாதிப்பு! தேங்கி நிற்கும் மழைநீரால் விளையாட்டு வீரர்கள்... அண்ணா விளையாட்டரங்கை சீரமைக்க கோரிக்கை

தினமலர்  தினமலர்
பாதிப்பு! தேங்கி நிற்கும் மழைநீரால் விளையாட்டு வீரர்கள்... அண்ணா விளையாட்டரங்கை சீரமைக்க கோரிக்கை

கடலுார்:கடலுார் அண்ணா விளையாட்டரங்கில், வடிகால் வசதியின்றி மழை நீர் தேங்கி நிற்பதால், விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறமுடியாமல் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடிகால் வசதியை ஏற்படுத்த, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் அண்ணா விளையாட்டரங்கம், 1968 ஜூலை 3ம் தேதி, அப்போதைய முதல்வர் அண்ணா துரையால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு, நீச்சல் பயிற்சி மையம், ஹாக்கி, கால் பந்து, வாலிபால், ஸ்கேட்டிங், பேஸ்கட் பால், பூப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட், தடகளம் உள்ளிட்ட மைதானங்கள்; யோகா மற்றும் உடற்பயிற்சி கூடம், விளையாட்டு விடுதி ஆகியன உள்ளன.இங்கு கடந்த 2010ல், ரூ.19 லட்சம் மதிப்பில், இறகு பந்து உள் விளையாட்டு அரங்கை, அப்போதைய அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். கடந்தாண்டு என்.எல்.சி., இந்தியா நிறுவனம் சார்பில், 1 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் விளையாட்டு மேம்பாட்டு பயிலரங்கம், திறந்தவெளி அரங்கம், துாணுடன் எல்.இ.டி., விளக்குகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.விளையாட்டு அரங்கத்தை சுற்றி, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் 1,100 மீட்டர் நீளத்திற்கு நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதே அரங்கின் நடுவில் ஹாக்கி மைதானமும், இதனை சுற்றி 400 மீட்டர் நீளத்திற்கு ஒரே நேரத்தில் 8 பேர் ஓடக்கூடிய வகையில் ஓடு தளம், பிரம்மாண்ட கேலரியும் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லுாரிகளுக்கு இடையோன விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
தினசரி காலை மற்றும் மாலையில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வர். ஹாக்கி, கபடி, கைப்பந்து, தடகளம், நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுகளில், 500க்கும் மேற்பட்டோர் தினசரி பயிற்சி பெற்று வருகின்றனர். வழக்கமாக விளையாட்டு மைதானங்கள், மழைநீர் தேங்காமல் வடியும் வகையில், மையப்பகுதி மேடாகவும், சுற்றியுள்ள பகுதி தாழ்வாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், கடலுார் அண்ணா விளையாட்டரங்கம் வித்தியாசமாக மையப்பகுதி பள்ளமாகவும், சுற்றியள்ள பகுதி மேடாகவும் அமைந்துள்ளது. வடிகால் வசதியும் அமைக்கப்பட வில்லை. இதனால், லேசான மழை பெய்தாலே, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். கடந்த மூன்று நாட்களாக கடலுார் பகுதியில் கன மழை பெய்து வருவதால், ஹாக்கி மைதானம் மற்றும் சுற்றியுள்ள ஓடு தளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால், பயிற்சிக்கு வரும் வீரர்கள் ஏமாற்றமடைகின்றனர். தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான போட்டிகள் கரூரில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க உள்ள மாவட்ட தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் அண்ணா விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொள்ள வந்தனர். தண்ணீர் தேங்கி நிற்பதால், அவர்களால் போதிய பயிற்சி பெற முடியவில்லை.
ஆண்டு தோறும் வடகிழக்கு பருவ மழை காலத்தில், விளையாட்டரங்கம் முழுவதும் ஒன்று முதல் இரண்டு அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கும்.இதனால், ஒரு மாத்திற்கும் மேல் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால், அவர்களின் விளையாட்டு திறன் பாதிப்படையும்.எனவே, அண்ணா விளையாட்டரங்கில் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில், வடிகால் வசதி ஏற்படுத்தி தர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரமில்லாத ஓடுதளம்விளையாட்டரங்கில் கடந்த 2005ல் ரூ.8 லட்சம் மதிப்பில் 400 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் செயற்கை ஓடு தளம் அமைக்கப்பட்டது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டு, மணல், அதன் மீது கிராவல், களிமண் நிலக்கரி துகள் கலவை கொட்டப்பட்டது. செயற்கை ஓடு தளம் தரமின்றி அமைக்கப்பட்டதால், அப்போது பெய்த கன மழைக்கு, மேலே கொட்டப்பட்டிருந்த களிமண், நிலக்கரி துகள் அடித்து செல்லப்பட்டது. அதனை இதுவரை புனரமைக்காததால், ஓட்டப் பயிற்சி மேற்கொள்வோர் சிரமம் அடைகின்றனர்.

மூலக்கதை