வெயிலூர் மழையூராக மாறியது: வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கனமழை.. வெள்ளக்காடாக மாறிய மாநகரம்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெயிலூர் மழையூராக மாறியது: வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கனமழை.. வெள்ளக்காடாக மாறிய மாநகரம்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டியது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர். மழைக்காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

பொதுமக்கள் நிவராண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். ஆனால் வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மட்டுமே காணப்பட்டது.

மழை எப்போது பெய்யும் என்று மக்கள் எதிர்பர்த்து காத்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் சாரலுடன் லேசான மழை தொடங்கியது. ஆனால் படிப்படியாக அதிகரித்து இரவு முதல் இடி, மின்னலுடன் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்ய தொடங்கியது.

அதிகாலை சுமார் 3 மணி அளவில் மழையின் தாக்கம் மேலும் அதிகரித்தது. அதிகாலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது.

பின்னர் படிப்படியாக குறைந்து மிதமான மழையாக ெதாடர்ந்து பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகள் மழை வெள்ளத்தில் மூழ்கியது.

புதிய பஸ் நிலையம், காமராஜர் சிலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, கிரீன் சர்க்கிள், சேண்பாக்கம், தோட்டப்பாளையம்,  உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் வேலூர் திடீர் நகர், இந்திரா நகர், கான்சால்பேட்டையில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

சுமார் 5 அடி தண்ணீரில் நீந்தி வெளியே வந்தனர். வீடுகளில் இருந்த பொருட்களும் மழைநீரால் சேதம் அடைந்தது.

இதனால் குழந்தைகள் முதல் ெபரியவர்கள் வரை கடும் அவதிக்கு ஆளாகினர். இதேபோல் காட்பாடி விஜி. ராவ் நகர், காந்திநகர் விரிவாக்கம், சித்தூர் பஸ்நிலையம், ஓடைபிள்ளையார் கோயில், சில்க்மில் போன்ற இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

வேலூர் காகிதப்பட்டறை டான்சி நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கான பள்ளம் தோண்டி பைப் லைன் புதைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை.

இதனால் அந்த பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கிக்கொண்டன.

ஆற்காடு சாலையிலும் சாலை அமைக்காததால் பள்ளம் ஏற்பட்டு கார்கள் சிக்கிக்கொண்டன. சாலை அமைப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் பல மாதங்களாக மவுனம் காத்து வருகின்றனர்.

இதனால் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக மக்கள் கூறினர். வெள்ளக்காடானது வேலூர் மாநகராட்சியில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் அதிகபட்சமாக மழை பெய்தது.

இதனால் நகரம் முழுவதும் பிரதான சாலைகள் உள்பட எல்லா இடங்களும் வெள்ளக்காடாக மாறியது. மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்கள் அடைக்கப்பட்டதால் மழைநீர் சாலையில் வெள்ளம்போல் ஓடியது.

இதனால் வீடுகளிலும்  மழைநீர் புகுந்தது. அருகில் இருந்த சாலைகளிலும் நாலாபுறமாக மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்தது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வேலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலையும் பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பெய்ததால் பல பள்ளிகளில் மழை சூழ்ந்துள்ளது. மழை காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

வேலூர் மாவட்டத்தில் வேலூரில் அதிகளவாக- 164. 7 மி. மீ (16 செமீ) மழை கொட்டியது. இதற்கு அடுத்தபடியாக காட்பாடியில்- 109 மி. மீ மழை பதிவானது.

மாவட்டம் முழுவதும் 730. 60 மி. மீ மழை பதிவாகி உள்ளது. வேலூரில் வெயில் மட்டுமே தனது அதிகாரத்தை செலுத்தி வந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தளவு மழை பெய்துள்ளதாகவும் இதனால் குடிநீர் பிரச்னை தீரும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

வேலூரில் வெயில் மட்டுமே தனது அதிகாரத்தை செலுத்தி வந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தளவு மழை பெய்துள்ளது.

.

மூலக்கதை