சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை: வேலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை: வேலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்களிலும், சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இருப்பினும் நேற்று பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தியதால் தமிழகத்தில் லேசான மழையே பெய்துள்ளது.

அதிகபட்சமாக நடுவட்டம், தேவாலா, கொடுமுடி ஆகிய இடங்களில் 20 மிமீ மழை பெய்துள்ளது. நன்னிலம், அவினாசி, ஏற்காடு, ஆரணி 10 மிமீ மழை பெய்துள்ளது.

சென்னையில் ஓரிரு இடங்களில் தூரல் மழை பெய்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.



கிண்டி, ஆலந்தூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பெருங்குடி, ஆதம்பாக்கம், நந்தம்பாக்கம், நங்கநல்லூர், தாம்பரம், குரோம் பேட்டை, பெருங்கெளத்தூர்,  முடிச்சூர், செம்பாக்கம், பொன்னேரி, மீஞ்சூர், திருத்தணி, செய்யூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோயில், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர், மாங்காடு, செங்கல்பட்டு, மதுராந்தகம்,  ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர், மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், புழல், செங்குன்றம், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி, கானத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர், வெள்ளம் போல் ஓடியது. பெண்ணாடம், திட்டக்குடி, இறையூர், முருகன்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, போளூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. கும்பகோணத்தில் நேற்று இரவு வரை சாரல் மழை நீடித்தது.

இதனால் சம்பா சாகுபடிக்காக நிலத்தை பண்படுத்தி வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரங்களான ஒலக்கூர், கூச்சி கொளத்தூர், மயிலம், கூட்டேரிப்பட்டு, சாரம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு 10 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.



திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டாரங்களான இந்திரா நகர், சத்யாநகர், மாம்பட்டு, பாதி, மும்முனி, சென்னாவரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவில் இருந்து மழை தொடர்ந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததோடு, வீட்டுக் கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர்.

மேலும் வேலூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனிடையே, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



‘மேற்கு மத்திய மற்றும் தென்மேற்கு அரபிக்கடலில் மணிக்கு 55 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் காற்றுவீசக்கூடும் என்றும், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும்; இப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்ட வளிமண்டல காற்று சுழற்சி வங்கக் கடல் பகுதியில், தமிழக கடலை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக வட மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை