புதிய குடிநீர் இணைப்பு பெற வரிசையில் வாங்க! மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு!

தினமலர்  தினமலர்
புதிய குடிநீர் இணைப்பு பெற வரிசையில் வாங்க! மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு!

கோவை:கோவை மாநகராட்சியில், சீனியாரிட்டி அடிப்படை யில், புதிய குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களில், விண்ணப்பித்த தேதி அடிப்படையில், முன்னுரிமை எண் குறிப்பிடும் பணி நடந்து வருகிறது.கோவை நகர்ப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிறுவாணி, பில்லுார் அணைகள் மற்றும் பவானி ஆறு, ஆழியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது.
கோடை மழை பெய்யாததால், நடப்பாண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.வாரத்துக்கு ஒருமுறை, 10 நாட்களுக்கு ஒருமுறை, 15 நாட்களுக்கு ஒரு முறை என, ஏரியாவுக்கு ஏற்ப குடிநீர் வினியோகிக்கப்பட்டது. சிறுவாணி அணை நீர் மட்டம் மளமளவென சரிந்ததால், பில்லுார் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இல்லாமல் இருந்ததால், புதிய குடிநீர் இணைப்பு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. விண்ணப்பங்கள் மட்டும் பெறப்பட்டன.தற்போது தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்திருப்பதால், பில்லுார் அணை நிரம்பியிருக்கிறது.
சிறுவாணி அணையில், 37 அடிக்கு நீர் இருப்பு இருக்கிறது. செப்., வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும்.அதன் பின், அக்., முதல் டிச., வரை வடகிழக்கு பருவ மழை காலம். தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால், அணைகளின் நீர் மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரே முறை, அதிக குடிநீர் வழங்குவதை காட்டிலும், வினியோக நாட்களின் இடைவெளியை குறைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.புதிய இணைப்பு வழங்கவும் திட்டமிட்டு உள்ளது.
இவ்விஷயத்தில் முறைகேடு நடப்பதற்கு, வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதால், சீனியாரிட்டி அடிப்படையில் எண் பதிவிட்டு, புதிய இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
'விரைவில் புதிய இணைப்பு'
மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் கூறுகையில், ''அதிக தண்ணீர் வினியோகித்தால், தொட்டிகளில் சேமித்து வைக்கின்றனர். அதில், டெங்கு கொசு புழுக்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது. அதற்கு பதிலாக, வினியோக நாட்களின் இடைவெளியை குறைக்க இருக்கிறோம். சீனியாரிட்டி அடிப்படையில், புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. விரைவில் புதிய இணைப்புகள் வழங்கப்படும்,'' என்றார்.

மூலக்கதை