காஞ்சி வீரன்ஸ் கிரிக்கெட் அணி உரிமையாளரான தமிழக கிரிக்கெட் வீரர் தற்கொலை ஏன்?...கடன்தொல்லை காரணமா? பரபரப்பு தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சி வீரன்ஸ் கிரிக்கெட் அணி உரிமையாளரான தமிழக கிரிக்கெட் வீரர் தற்கொலை ஏன்?...கடன்தொல்லை காரணமா? பரபரப்பு தகவல்கள்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், காஞ்சிவீரன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான வி. பி. சந்திரசேகர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அவர், நிதி நெருக்கடி ஏற்பட்டு மனமுடைந்து தற்கொலை  செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக இருந்தவர் வி. பி. சந்திரசேகர்.

இவர், சென்னையில் 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பிறந்தார்.   தற்போது மயிலாப்பூர் விஸ்வேஷ்வரபுரத்தில் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தால் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

பிறகு சர்வதேச போட்டியில் 1988ம் ஆண்டு  நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

அதிகபட்சமாக 53 ரன் எடுத்தார். ஆனால் முதல் தர போட்டிகளில் 4999 ரன் எடுத்துள்ளார்.

அதிகபட்சமாக  ஆட்டமிழக்காமல் 237 ரன் எடுத்துள்ளார்.

அதிலும் இந்திய முதல் தர போட்டிகளில் 56 பந்துகளில் அதிவேக சதமடித்து சாதனை புரிந்தார். அந்த சாதனை 2016ம் ஆண்டுதான் முறியடிக்கப்பட்டது.

தமிழ்நாடு அணிக்காக கிருஷ்ணமாச்சாரி காந்த் - வி. பி. சந்திரசேகர் இணை  வெற்றிகரமான தொடக்க ஆட்டக்கார்களாக விளங்கினர். இவர்கள் விளையாடிய போதுதான் தமிழ்நாடு அணி 1987-88ல் ரஞ்சி கோப்பையையும், 1988-89ம் ஆண்டு இரானி கோப்பையையும் வென்றது.

தமிழ்நாடு அணியின் கேப்டன்,  பயிற்சியாளராக இருந்துள்ளார். அதன் பிறகு கோவா மாநில அணிக்காவும் விளையாடி உள்ளார்.

வி பி நெஸ்ட் என்ற பெயரில் வேளச்சேரியில் கிரிக்கெட் பயிற்சி மையத்தையும் நடத்தி வந்தார். தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) தொடரில்  ‘‘காஞ்சி வீரன்ஸ்’’ என்ற அணியை வி. பி. சந்திரசேகர் வாங்கியிருந்தார்.

கூடவே தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றினார். எப்போதும் உற்சாகமாக, சிரித்த முகத்துடன் காட்சியளிப்பார்.

இந்நிலையில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் இவரது அணியான காஞ்சி வீரன்ஸ் அணி சொல்லும் படியாக வெற்றி பெற வில்லை.

கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த லீக் போட்டியிலும் காஞ்சி வீரன்ஸ் அணி தகுதி போட்டியில் 4வது  அணியாகத்தான தேர்வானது. தனது கிரிக்கெட் அணிக்காக பல கோடி ரூபாய் வங்கிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் கடன் வாங்கி செலவு செய்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் உள்ள 8 அணிகளில் 7 அணிகள்  தொழிலதிபர்கள் வசம் உள்ளது. தொடர் தோல்வி காரணமாக அணிக்காக வாங்கிய கடனில் இருந்து மீளமுடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே நேற்று இரவு தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இறுதி போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. அதில் சேப்பாக் சூப்பர்  கில்லீஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதை வி. பி. சந்திரசேகர் தனது வீட்டில் நேரலையாக தனது குடும்பத்துடன் பார்த்து கொண்டிருந்தார்.

திடீரென அவர் தனது அறைக்கு சென்று கதவை  மூடிக்கொண்டார். அறைக்கு சென்ற கணவர் வெகு நேரம் வெளியே வராததால்  சந்தேகமடைந்த அவரது மனைவி அறையின் கதவை தட்டினார்.

ஆனால் கதவு திறக்காததால் அருகில் இருந்தவர்கள்  உதவியுடன் கதவை உடைத்து பார்த்த  போது வி. பி. சந்திரசேகர் மின் விசிறியில் தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் விரைந்து வந்து வி. பி. சந்திரசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில்  காஞ்சிவீரன்ஸ் அணியின் தொடர் தோல்வியால்  பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக வாங்கிய கடனை எப்படி அடைக்க போகிறோம்  என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் தற்கொலை செய்துகொண்டதற்கு வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை  நடத்திவருகின்றனர்.

.

மூலக்கதை