இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அத்திவரதரை தரிசனம் செய்ய அலை மோதும் மக்கள் கூட்டம்: இன்று பால்வண்ண ரோஸ் நிற பட்டுடுத்தி காட்சியளித்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அத்திவரதரை தரிசனம் செய்ய அலை மோதும் மக்கள் கூட்டம்: இன்று பால்வண்ண ரோஸ் நிற பட்டுடுத்தி காட்சியளித்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1 ம் தேதி தொடங்கியது. வரும் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெற உள்ளது.

சயன கோலம் ஜூலை 31ம் தேதி முடிவடைந்தது. கடந்த 1ம் தேதி முதல் வரும் 16ம் தேதிவரை நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

இந்த வைபவம் தொடங்கிய நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி அத்தி வரதரை தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 43 நாட்களில் 80 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளனர்.

45வது நாளான இன்று பால்வண்ண ரோஸ் நிற பட்டுடுத்தி மனோரஞ்சிதம் பூ, செண்பகப்பூ, பட்டு மாலைகள் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் காஞ்சிபுரத்தின் எல்லைகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வெளியூரில் இருந்து வரும் கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கிருந்து இணைப்பு பஸ்கள் மூலம் பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று கட்டுக்கடங்காத பக்தர்கள் வருகையால் அத்திவரதர் தரிசனம் நள்ளிரவு வரை நீடித்தது.

இந்த வைபவம் இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ரஜினி தரிசனம்

நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா மற்றும் குடும்பத்தாருடன், நேற்று நள்ளிரவு 12 மணியளவில்  வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்தார்.

மேற்கு கோபுரம் வழியாக வந்த அவர், விவிஐபி தரிசன பாதையில் சென்று அத்தி வரதரை தரிசனம் செய்தார்.

ஆண்குழந்தை பிறந்தது

அத்திவரதர் வைபவத்தில் இன்று காலை தரிசனம் மேற்கொள்ள வந்த நெமிலி பானாவரம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் மனைவி விமலாவிற்கு (25) திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை கோயில் வளாகத்தில் 16 கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ உதவி முகாமுக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு 3 கிலோ எடையுடைய அழகான ஆண் குழந்தை சுகபிரசவத்தில் பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

.

மூலக்கதை