பரிதாபம்! சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை நிலை... 100 ஆண்டுகள் ஆகியும் கட்டமைப்பு இல்லை

தினமலர்  தினமலர்
பரிதாபம்! சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை நிலை... 100 ஆண்டுகள் ஆகியும் கட்டமைப்பு இல்லை

சென்னை : நுாற்றாண்டு விழா கொண்டாட உள்ள, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, பல்வேறு பிரச்னைகளால், மூடுவிழா காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்தினால், கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, சென்ட்ரலில் உள்ள அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் கூட்டம் குறைவதுடன், விபத்து போன்ற அவசர சிகிச்சையை விரைந்து அளித்து, பல உயிர்களை காக்க முடியும். சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, 1920ல் துவங்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையமாக துவங்கி, படிப்படியாக தரம் உயர்ந்தது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட குக்கிராமங்களில் இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன், மக்கள் இந்த மருத்துவமனையை தான் நாடினர்.அவசர சிகிச்சைஇங்கு, பொது மருத்துவம், விபத்து அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினசரி, 1,500க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, சித்தா உள்ளிட்ட வசதிகளுடன், 50 படுக்கையுடன், 24 மணி நேர மருத்துவமனையாக செயல்படுகிறது.தற்போது, சைதாப்பேட்டை, நந்தனம், கிண்டி, வேளச்சேரி, ஆலந்துார், தரமணி, அடையாறு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் சுற்றுவட்டார பகுதி மக்கள், இந்த மருத்துவமனையை நாடுகின்றனர்.
மேலும், இதே பகுதிகளில் நடக்கும், சாலை மற்றும் கட்டட விபத்தில் பாதிக்கப்பட்டோர், அவசர சிகிச்சைக்கு, இந்த மருத்துவமனைக்கு தான் அழைத்து வரப்படுகின்றனர்.இங்கிருந்து, மேல் சிகிச்சைக்கு, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் மற்றும் சென்ட்ரல் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். இதனால், விபத்து, உயிர் பாதுகாப்பின் நுழைவு வாயில் போல், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை செயல்படுகிறது.
ஆனால், இடப் பற்றாக்குறை, ஊழியர் பற்றாக்குறை மற்றும் நிர்வாக மாற்றம் காரணமாக, மருத்துவமனை, கொஞ்சம், கொஞ்சமாக செயல் இழந்து வருகிறது.இடவசதி இல்லைகடந்த, 1970ல் நியமித்த ஊழியர்கள் எண்ணிக்கை தான், தற்போதும் உள்ளது. தற்போதைய, மக்கள் தொகைக்கு ஏற்ப, ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.பெரிய அளவில் விபத்து நடந்தால், இரண்டு பேருக்கு மேல், அவசர சிகிச்சை அளிக்க, போதிய இடவசதி இல்லை. கட்டடம் கட்ட வசதி இருந்தும், மூன்று முறை மதிப்பீடு தயாரித்தும், போதிய நிதி ஒதுக்காமல், அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், பழைய ஓட்டு கட்டடம் இடிக்கப்பட்டது. அதில், 26 ஆயிரத்து, 921 சதுர அடி பரப்பில், நவீன வசதியுடன், எட்டு மாடி கொண்ட கட்டடம் கட்ட, 2017ல், 40 கோடி ரூபாயில், மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.கோரிக்கைஇதற்கான கோப்புகள், நிர்வாக குளறுபடி, அரசியல் தலையீடு காரணமாக, தலைமை செயலகத்தில், துாசி படிந்து கிடக்கிறது.கடந்த, 2000ல், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, தற்போது செயல்படும் கட்டடம் கட்டப்பட்டது. அதன்பிறகு, 2018ல், தொகுதி, எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 54 லட்சம் ரூபாயில் நவீன, 'எக்ஸ்ரே' கருவியுடன் கூடிய, அறை கட்டப்பட்டது.
மருத்துவமனையை நவீனமயமாக்க, அரசு நேரடியாக நிதி ஒதுக்காததால், அவசர சிகிச்சை நோயாளிகள், மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.புதிய கட்டடம் கட்டி நவீனமயமாக்க, தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என, சைதாப்பேட்டை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விபத்து, உடல் பாதிப்பின் போது, அவசர சிகிச்சை தான், மனிதனை உயிர்ப்பிக்கிறது. இங்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்கு, ராயப்பேட்டை, சென்ட்ரல் செல்லும் போது, உடல் பலவீனம், வாகன நெரிசல் காரணமாக, உரிய நேரத்தில் மேல் சிகிச்சை கிடைக்காமல், இறப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சென்னையின் மையப்பகுதியில் உள்ள, இந்த மருத்துவமனையில், 100வது ஆண்டு விழா கொண்டாடுவதற்கு பதில், மூட திட்டமிட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறதுசமூக ஆர்வலர்கள்நீண்ட காலத்திற்கு பின், என் தொகுதி நிதியை ஒதுக்கி, மருத்துவமனையை ஓரளவு உயிர்ப்பித்துள்ளேன். துறை செயலராக, ராதாகிருஷ்ணன் இருக்கும் போதே, மூன்று முறை மதிப்பீடு தயாரித்து, கிடப்பில் போடப்பட்டது. இரண்டு முறை, சட்டசபையிலும் பேசிவிட்டேன். நிதி ஒதுக்காததற்கு, அரசியல் காரணம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
மக்கள் நலன்கருதி, தேவையான நிதியை, அரசு ஒதுக்க வேண்டும்.மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,பரப்பளவு சதுர அடிமருத்துவமனை மொத்த வளாகம் 57,739 தற்போதைய மருத்துவமனை கட்டடம் 15,967எட்டு மாடிக்கு பரிந்துரைத்தது 26,921தேவையற்ற நிர்வாக மாற்றம்!சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, சென்னை மாவட்ட எல்லையில் உள்ளது. ஆரம்பத்தில் இருந்து, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.
நிர்வாக குளறுபடி, அரசியல் தலையீடு காரணமாக, 2011 முதல், காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்ககத்தின் கீழ் மாற்றப்பட்டது.மருந்து கேட்பு உள்ளிட்ட, மருத்துவமனை நிர்வாகம் தொடர்பான கோப்புகள் ஒப்புதலுக்கு, ஒவ்வொரு முறையும், 70 கி.மீ., துாரத்தில் உள்ள, காஞ்சிபுரம் சுகாதார அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. இதனால், நிர்வாக சிக்கல், பணிப்பளு அதிகரிப்பு போன்றவையால், மருத்துவமனை நிர்வாகம் திண்டாடுகிறது. இந்த மருத்துவமனையை, மீண்டும், சென்னை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோயாளிகள் பாதிப்பு! சைதாப்பேட்டை மருத்துவமனையில், தினசரி, 250க்கும் மேற்பட்டோர், ரத்த பரிசோதனை செய்கின்றனர். மூன்று லேப் டெக்னீஷியன் இருக்க வேண்டும். ஆனால், ஒருவர் தான்உள்ளார். அதேபோல், எக்ஸ்ரே இயக்க, நான்கு பேருக்கு, ஒருவர் தான் உள்ளார். இதனால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையை, உரிய நேரத்தில் பரிசோதிக்க முடியாமல், நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

மூலக்கதை