தினமும் 50 கிலோ மீட்டர் ஓடி இளம்பெண் கின்னஸ் சாதனை முயற்சி: காஷ்மீரில் தொடங்கியவர் குமரியில் நாளை நிறைவு செய்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தினமும் 50 கிலோ மீட்டர் ஓடி இளம்பெண் கின்னஸ் சாதனை முயற்சி: காஷ்மீரில் தொடங்கியவர் குமரியில் நாளை நிறைவு செய்கிறார்

நெல்லை: ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மீரை சேர்ந்த விகாஸ் மனைவி சுபியாகான்(33). மராத்தான் ஓட்டத்தில் பெண்கள் சாதனையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஓடி சாதனை படைக்க முடிவெடுத்தார்.

சுமார் 4 ஆயிரம் கிமீ தூரத்தை 80 முதல் 85 நாட்களுக்குள் ஓடி முடிக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த ஏப்ரல் 25ம் தேதியன்று காஷ்மீர் நகர் நேரு பார்க்கில் மராத்தான் ஓட்டத்தை தொடங்கினார்.

தினமும் காலையில் 25 கிமீ, மாலையில் 25 கிமீ என மொத்தம் 50 கிமீ ஓடியே பல மாநிலங்களை கடந்தார். 86வது நாளான நேற்று நெல்லை வந்து சேர்ந்தார்.

நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் வருவாய் துறை அதிகாரிகள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கின்னஸ் சாதனைக்கு முயலும் சுபியாகான் கூறுகையில், ‘‘எனக்கு சிறுவயதில் இருந்தே ஓட்டத்தில் அதிக ஆர்வம் இருந்தது.

எனது கணவர் விகாஸ் சைக்கிள் ரேசில் சாதனைகள் படைத்துள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 10 நாளில் சைக்கிளில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அதை பார்த்தே எனக்கு மராத்தான் ஓட்டத்தில் சாதனை படைக்கும் ஆர்வம் வந்தது. 4 ஆயிரம் கிமீ தூரத்தை 85 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டிருந்தேன்.

ஆனால் தமிழக பகுதிகளில் பலத்த காற்று காரணமாக நாளொன்றுக்கு 40 கிமீ தூரமே கடக்க முடிந்தது. நாளை மறுதினம் (88 நாட்களுக்குள்) ஓட்டத்தை முடிக்க முடியும் என நம்புகிறேன்.

இத்தகைய தூரத்தை பெண் ஒருவர் ஓடியே கடப்பது கின்னஸ் சாதனையாகும். நான் சாலையில் ஓடத் தொடங்கியதும் எனது வாட்ச் மூலம் சாட்டிலைட்டில் டெல்லியில் உள்ள தலைமையகத்திற்கு தகவல் பரிமாறப்படும்.



எனது ஓட்ட வேகம், பல்ஸ், ரத்த ஓட்டம் ஆகியவை உடனுக்குடன் பதிவாகும். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட இடத்தில் நாங்கள் போட்டோ, வீடியோ எடுத்தும் தலைமையகத்திற்கு தகவல் பரிமாற வேண்டும்’’ என்றார்.

நேற்று மாலையில் சுபியாகான் பாளை. கேடிசி நகர் நான்கு வழிச்சாலையில் ஓடத் தொடங்கி, பொன்னாக்குடியை தாண்டி சுமார் 20 கிமீ தூரத்தை கடந்தார்.

நாளை 21ம் தேதி அவர் கன்னியாகுமரியை சென்றடைகிறார். அங்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களால் அவருக்கு பாராட்டு விழா நடக்கிறது.

கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சுபியா கான் ஏற்கனவே ‘தங்க வட்டம்’ என கூறப்படும் டில்லி-ஜெய்ப்பூர்-ஆக்ரா- டில்லி பகுதிகளின் 720 கிமீ தூரத்தை 16 நாளில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை