தூத்துக்குடியில் மணிக்கு 42 கிமீ வேகத்தில் காற்று வீசியது: வாகைகுளத்தில் சுழன்றடித்த புழுதியால் விமானம் தரை இறங்காமல் திரும்பியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தூத்துக்குடியில் மணிக்கு 42 கிமீ வேகத்தில் காற்று வீசியது: வாகைகுளத்தில் சுழன்றடித்த புழுதியால் விமானம் தரை இறங்காமல் திரும்பியது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று மணிக்கு 42 கிமீ வேகத்தில் காற்று வீசியது. வாகைகுளத்தில் சுழன்றடித்த புழுதியால் விமானம் தரை இறங்காமல் திரும்பிச் சென்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வெயில் தணிந்து, வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதேநேரத்தில் பலத்த காற்று வீசியது.

தூத்துக்குடி நகர பகுதியில் மணிக்கு 42 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ரோடுகளில் புழுதி, மண் பறந்தது.

நடைபாதை வியாபாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். சில இடங்களில் பெரிய மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

பலத்த காற்றினால் காலை முதல் மாலை வரை சுமார் 20 முறை மின்தடை ஏற்பட்டது. இதனால் சிறு தொழில்கள், வர்த்தகம், கடைகள், அலுவலகங்கள், ஆன்லைன் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

விமான நிலையம் அமைந்துள்ள வாகைகுளம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. இதனால் அந்த பகுதியில் உள்ள செம்மண் புழுதியாக பறந்தது.



இதனால் வானமே செங்கல் கலராக மாறி காட்சி அளித்தது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 11. 45 மணிக்கு தனியார் விமானம் 74 பயணிகளுடன் வந்தது.

அப்போது பயங்கர புழுதிக்காற்று வீசியதால், விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் சிறிது நேரம் அந்த பகுதியில் வட்டமடித்தது.

விமானம் இறங்குவதற்கு உகந்த அறிவிப்பு கிடைக்காததால் அந்த விமானம் மதுரைக்கு திரும்பி ெசன்றது. இதனால் பயணிகள் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு பஸ், கார்களில் வந்தனர்.

இதுபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்காக 72 பயணிகள் இருந்தனர். அவர்களில் பலர் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

மாலையில் காற்றின் வேகம் சற்றே குறைந்ததால் மீண்டும் விமான சேவைகள் வழக்கம்போல இயங்கின.

.

மூலக்கதை