தீவிரவாத செயலுக்காக நிதி: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் என்ஐஏ சோதனை: 16 பேரின் வீடுகளில் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீவிரவாத செயலுக்காக நிதி: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் என்ஐஏ சோதனை: 16 பேரின் வீடுகளில் அதிரடி

சென்னை: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தீவிரவாத செயலுக்காக நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 பேரின் வீடுகளில் இன்று என். ஐ. ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் கேரளா, தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதனையடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என். ஐ. ஏ) அதிகாரிகள், இலங்கை சம்பவத்தின் தொடர்ச்சியாக சிலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் பல இடங்களில் என். ஐ. ஏ அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

கடந்த வாரம் சென்னை மண்ணடியில் உள்ள இஸ்லாமிய அமைப்பின் அலுவலகம் ஒன்றில் என். ஐ. ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 14 பேர் துபாயில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.



அவர்கள் டெல்லியில் என். ஐ. ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, நாகப்பட்டினத்தில் இருவர் கைது செய்யப்பட்டு 16 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவ் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 பேரிடமும்  விசாரணை நடத்த அனுமதி கோரி என். ஐ. ஏ.   அதிகாரிகள் பூந்தமல்லி  என். ஐ. ஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை  விசாரித்த நீதிபதி பி. செந்தூர்பாண்டி, 16 பேருக்கும் 8 நாள்கள் போலீஸ்  காவல் அளித்து ேநற்று உத்தரவிட்டார்.    இதன்படி அதிகாரிகள், 16  பேரிடமும் ஜூலை 26ம் தேதி வரை விசாரணை செய்ய உள்ளனர்.

விசாரணையில், ‘அன்சருல்லா’ என்ற அமைப்புக்கு துபாயில் நிதி திரட்டி தமிழகத்தில்  தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய விபரங்கள் தெரியவரும். இதற்கிடையே போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 16 பேரின் சொந்த ஊர்களான சென்னை, மதுரை, தேனி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில், சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று என். ஐ. ஏ.

அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கொத்தவால்சாவடி டேவிட்சன் தெருவை சேர்ந்த தவ்ஃபிக் அகமத் என்பவரை கடந்த மாதம் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இன்று அவரது வீட்டில் என். ஐ. ஏ அதிகாரிகள் 5 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 6. 30 மணியில் இருந்து சோதனை நடக்கிறது. அப்போது, பாதுகாப்புக்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டதால், பாரிமுனை, கொத்தவால்சாவடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை நரிமேட்டிலுள்ள முகம்மது ஷேக் மைதீன் என்பவரது வீட்டில், என். ஐ. ஏ அதிகாரிகள் ராஜேஸ்வரரெட்டி, வெங்கடாஜலபதி ஆகியோர் தலைமையில் ஒன்றரை மணி நேரம் நடந்த சோதனையில் இங்கிருந்து எந்தவித ஆவணமோ, பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரபீக் அகமது, மொய்தீன் சீனி சாகுல் ஹமீது, பைசல் ெஷரீப், முன் தாசீர்  ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வாலிநோக்கத்திலுள்ள ஒருவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோம்பையைச் சேர்ந்த சகோதரர்கள் மீரான்கனி, முகம்மது அப்சல் ஆகியோர் வீட்டில் என்ஐஏ டிஎஸ்பி சீனிவாசராவ், இன்ஸ்பெக்டர் பாரதிராஜா ஆகியோர் தலைமையிலான குழுவினர் அதிகாலை 6 மணி முதல் 4 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது இப்ராகிம் வீட்டில், என்ஐஏ இன்ஸ்பெக்டர் எபிசன் டாங்கோ தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர், காலை 6 மணி முதல் 9. 15 மணி வரை சோதனை நடத்தினர்.

சோதனையின் போது அவரது தாய் தவுலத் மட்டும் வீட்டில் இருந்தார். இந்த சோதனையை முன்னிட்டு போலீஸ் உதவி கமிஷனர்கள் கோடிலிங்கம், திபு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

மேலும் அந்தத் தெருவில் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாய் தவிர முகமது இப்ராகிமின் உறவினர்களிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் முகமது மைதீன் மகன் முகமது அசாருதீன் (25). இவரது வீடு முத்துப்பேட்டை தென்னமரக்கடை தெருவில் உள்ளது.

இந்த வீட்டில் சோதனை நடத்த இன்று அதிகாலை 5. 30 மணியளவில் என்ஐஏ அதிகாரிகள் 2 பேர் வந்தனர்.

அப்போது அசாருதீன் வீடு, பூட்டிக்கிடந்தது. அசாருதீன் பெற்றோர் சென்னையில் இருப்பது தெரியவந்தது.

அருகில் வசிக்கும் அசாருதீன் உறவினர் ஒருவரிடம் செல்போன் எண்ணை வாங்கி, சென்னையில் உள்ள அசாருதீனின் பெற்றோரை தொடர்பு கொண்ட அதிகாரிகள், வீட்டில் சோதனை நடத்த வந்திருப்பதாக கூறினர். அப்போது அசாருதீனின் பெற்றோர், ஒரு நாள் அவகாசம் தாருங்கள், நாளை வந்து விடுகிறோம் என்றனர்.

இதை என்ஐஏ அதிகாரிகள் ஏற்கவில்லை.
இதற்கிடையே எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் அங்கு வந்தார். அவர், ‘‘அசாருதீனின் பெற்றோர் இல்லாமல் வீட்டில் சோதனை நடத்தக்கூடாது’’ என்றார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து, முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் முத்துப்பேட்டை விஏஓ தினேஷ் குமார், கற்பகநாதர்குளம் விஏஓ இமானுவேல், அசாருதீனின் உறவினர் சேக் பரீது ஆகியோர் முன்னிலையில் காலை 7. 15 மணியளவில் அசாருதீன் வீட்டின் இரும்பு கேட், கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டன. பின்னர் வீட்டுக்குள் புகுந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அசாருதீனின் வீட்டு பூட்டை உடைத்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் முத்துப்பேட்டை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி. இதனால் முத்துப்பேட்டை பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா லெப்பைக்குடிக்காட்டை சேர்ந்த குலாம்நபி ஆசாத், சென்னை கொத்தவால்சாவடி டேவிட்சன் தெருவை சேர்ந்த தவுபிக் அகமது, நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மடத்துவபுரத்தில் உள்ள முகமது இப்ராகிம் வீடுகளிலும் சோதனை நடந்தது. மடத்துவபுரத்தில் முகமது இப்ராகிம் வீட்டில் காலை 6 மணிக்கு துவங்கிய சோதனை, 8. 30 மணிக்கு முடிந்தது.
முகமது இப்ராகிமின் மனைவி பாத்திமா வீடு மேலப்பாளையம் ராவுத்தர் மேற்கு தெருவில் உள்ளது.

அங்கும் போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கிருந்தும் சில ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து முகமது இப்ராகிமின் தாய் தவுலத் கூறுகையில், ‘‘அதிகாரிகள் வீட்டிலிருந்த பீரோ உள்ளிட்டவற்றை திறந்து பார்த்து சோதனை நடத்தினார்கள். வேறு எதுவும் தெரியாது’’ என்றார்.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 7 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை