சந்திராயன்2 விண்கலம் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சந்திராயன்2 விண்கலம் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

சென்னை: திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திராயன்2 விண்கலம், ஜி. எஸ். எல். வி மார்க் 3எம்1 ராக்கெட் மூலம் வரும் 22ம் தேதி மதியம் 2. 43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சந்திராயன்1 விண்கலம் கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி பி. எஸ். எல். விசி 11 ராக்கெட் மூலம் நிலவுக்கு இஸ்ரோ அனுப்பியது.

இந்த விண்கலம் நிலவில் உள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதையடுத்து, இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திராயன்2 விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது.

அதன்படி, நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்கு ஏற்றவாறு சந்திராயன்2 விண்கலம் வடிவமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அதிக எடைகொண்ட சந்திராயன்2 விண்கலத்தை ஜி. எஸ். எல். வி மார்க் 3 எம்1 ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டு கடந்த 15ம் தேதி அதிகாலை 2. 51 மணிக்கு அனுப்ப இஸ்ரோ தயாராக இருந்தது.



ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆந்திரா ஆளுநர் நரசிம்மன், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மத்திய அமைச்சர்கள் வந்திருந்தனர். இந்தநிலையில், சந்திராயன்2 விண்கலம் விண்ணில் ஏவுவதற்கு 54 நிமிடங்கள் 24 வினாடிகள்(1. 50 மணி) இருந்தபோது கவுன்டவுன் திடீரென நிறுத்திவைக்கப்பட்டது.

ராக்கெட்டில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததை இஸ்ரோ விஞ்ஞனிகள் கண்டறிந்தனர். பின்னர், ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று இஸ்ரோ அறிவித்தது.

இந்தநிலையில், தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இதற்காக ஆலோசனைகளையும் மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில், தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டதையடுத்து அதுகுறித்த சோதனைகளையும் மேற்கொண்டனர்.

தற்போது அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்ட நிலையில், வரும் 22ம் தேதி(திங்கள் கிழமை) பிற்பகல் 2. 43 மணிக்கு சந்திராயன்2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


.

மூலக்கதை