நிலம் கையகப்படுத்தும்போது முழு விவரங்களை பெற வேண்டும்: பதிவு அலுவலர்களுக்கு ஐஜி அறிவுரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிலம் கையகப்படுத்தும்போது முழு விவரங்களை பெற வேண்டும்: பதிவு அலுவலர்களுக்கு ஐஜி அறிவுரை

சென்னை: நிலம் கையகப்படுத்தும் போது முழு விவரங்களை பெற வேண்டும் என்று பதிவு அலுவலர்களுக்கு ஐஜி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக அரசால் பல்வேறு நோக்கங்களுக்காக தனியார் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

அவ்வாறு கையகப்படுத்தும் போது அந்த நிலங்களின் விவரம் தொடர்பாக நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நில எடுப்பு அலுவலரால் கையகப்படுத்தபடவுள்ள நிலங்கள் குறித்த விவரம் தனியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

அவ்வாறு அனுப்பும் போது ஒரு குறிப்பிட்ட புல எண்ணில் எவ்வளவு பரப்பு நிலம் கையகப்படுத்தப்படுகிறது, கையகப்படுத்தும் நிலம் எந்த பகுதியில் அமைந்துள்ளது போன்ற விவரங்கள் சேர்க்கப்படாததால் வில்லங்க சான்றிதழில் அந்த புல எண்ணுக்குரிய முழு பரப்பளவு நிலமும் கையகப்படுத்தப்படுவதாக சேர்க்கப்படுகிறது.

இதனால், அந்த புல எண்ணில் கையகப்படுத்தாத பகுதியாக இருந்தும் விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாதது மட்டுமின்றி, நிதி நிறுவனங்களும் அந்த இடத்திற்கு கடன் அளிக்க மறுக்கின்றன.

இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் அனைத்து மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள், பதிவு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நில எடுப்பு அலுவலரால் கையகப்படுத்தப்படவுள்ள நிலம் தொடர்பான விவரங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

அதாவது கிராமம், புல எண், அந்த புல எண்ணில் கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு, அரசால் கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பு, சர்வே எண்ணின் மொத்த பரப்பை விட குறைவாக இருப்பின் நான்கு பக்க எல்லை விவரங்கள் அல்லது எடுக்கப்படும் பகுதியை குறிக்கும் வரைப்படம் இடம்பெற வேண்டும்.

ஒரு புல எண்ணில் கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பு விவரம் தெரிவிக்கப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட அட்டவணையில் உரிய குறிப்பு மேற்கொள்ளாமல் நில எடுப்பு அலுவலருக்கு குறிப்பிட்டுள்ள விவரங்களை அனுப்புமாறு கடிதம் எழுத வேண்டும். விவரங்கள் பெறப்பட்டவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு புல எண்ணின் பரப்பை அரசால் கையகப்படுத்தப்படவுள்ள பகுதியின் பரப்பினுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

புல எண்ணின் முழு பரப்பளவும் அரசால் கையகப்படுத்தும் நிலையில் நில எடுப்பு அலுவலரின் கடிதத்தை பதிவுச்சட்டம் 1908 பிரிவு 89ன்படி குறிப்பாணை கோப்பில் கோர்வை செய்து உரிய அட்டவணை செய்ய வேண்டும்.

இதுவரை நில எடுப்பு அலுவலரால் கடிதம் அளிக்கப்பட்டு நில எடுப்பு முடியாத திட்டங்களை பொறுத்தும் மேற்கண்டவாறு உரிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து அவ்வாறு விவரங்கள் குறிப்பிடாத நிலையில் சம்பந்தப்பட்ட நில எடுப்பு அலுவலருக்கு இது குறித்த விவரத்தை தெரிவித்து உரிய விவரங்கள் பெற்று சம்பந்தப்பட்ட அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை