மாமல்லபுரம் அருகே தனியார் பஸ்-கார் பயங்கர மோதல்: சட்ட மாணவர் உள்பட 5 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாமல்லபுரம் அருகே தனியார் பஸ்கார் பயங்கர மோதல்: சட்ட மாணவர் உள்பட 5 பேர் பலி

திருப்போரூர்: சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திருமண கோஷ்டியினர் சென்ற தனியார் பஸ், மாமல்லபுரம் அருகே கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் சட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூரை சேர்ந்த ஒருவரின் திருமணம் இன்று காலை சென்னை அடுத்த எண்ணூரில் நடந்தது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்றிரவு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருமண வீட்டார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என பலர், தனியார் பஸ் மூலம் சென்னைக்கு நேற்று வந்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், நேற்றிரவு 11 மணியளவில் கடலூருக்கு புறப்பட்டனர். நள்ளிரவு என்பதால் பலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.

மாமல்லபுரம் அருகே கடம்பாடி என்ற இடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி ஒரு கார் அதிவேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார் மீது பஸ் பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.

பஸ் மற்றும் காரில் பயணம் செய்த அனைவரும் அலறி துடித்தனர். காரில் பயணம் செய்த சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவர் கார்த்திக் (21), பெரம்பூரை சேர்ந்த சாய்சதீஷ் (35), திலீப்குமார் (35), நேதாஜி (35), அமைந்தகரை முகமதுரஹீம்அல்புஷ்ரா ஆகிய  5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

 பஸ்சில் பயணம் செய்த கடலூர் திஞ்சம்பேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி (54), கிச்சன்பேட்டை அப்துல் ஹமீது (40), சிங்கார தோப்பு தனம் (45), கஞ்சம்பேட்டை பாப்பாத்தி (65) ஆகியோருக்கு தலையில் காயமும், கை, கால்களில் முறிவும் ஏற்பட்டது.

மேலும் மகேஸ்வரி (45), சத்யா (27), விமலா (43), கல்யாணி (35), செல்வி (50), காமாட்சி (39), சாந்தி (40), லீனா (40), கொளஞ்சி (60), இந்துமதி (24), குமரேசன் (45), கீதா (45) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். திருக்கழுக்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டு, காரின் இடிபாடுகளில் சிக்கி இறந்த 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

இந்த 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காகவும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், காரில் வந்தவர்கள் மது அருந்தி விட்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்ைக வந்த பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பஸ்-கார் மோதிய விபத்தில் 5 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

களை இழந்த திருமண மண்டபம்: விபத்தில் 5 பேர் இறந்த சம்பவத்தை கேள்விபட்டதும் மணமகன், மணமகள் வீட்டார் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். இருப்பினும் இன்று காலை திருமணம் தடையின்றி நடந்தது.

திருமணத்துக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் மிகுந்த சோகத்தில் காணப்பட்டனர்.

இதனால் திருமண மண்டபம் களை இழந்து காணப்பட்டது.

.

மூலக்கதை