நெல்லையில் நடந்த பரபரப்பு புதுமாப்பிள்ளையை காரில் கடத்தி சரமாரி அடித்து உதைத்து சித்ரவதை: சினிமா பாணியில் போலீசார் மீட்டனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நெல்லையில் நடந்த பரபரப்பு புதுமாப்பிள்ளையை காரில் கடத்தி சரமாரி அடித்து உதைத்து சித்ரவதை: சினிமா பாணியில் போலீசார் மீட்டனர்

நெல்லை: நெல்லையில் புதுமாப்பிள்ளையை காரில் கடத்தி தாக்கிய கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். சினிமா பாணியில் அரங்கேறிய காட்சி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இதுபற்றி விவரம் வருமாறு:நெல்லை மாவட்டம் நாங்குநேரி சன்னதி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்.

இவரது மகன் முத்துப்பாண்டி (31). இவர் திருமணம் மற்றும் திருவிழாவுக்கு கச்சேரி  நடத்தி வந்தார்.

இவருக்கும், பாளை கேடிசி நகரை சேர்ந்த குற்றாலிங்கம் மகள் வேலம்மாள்(25) என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.   குற்றாலிங்கத்தின் சொந்த ஊர் பாணாங்குளம் அருகே உள்ள பூலம். திருமணமான 2 மாதங்களில் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு  பிரிந்துவிட்டனர்.

இதன்பிறகு பெண் வீட்டார் முத்துபாண்டியிடம் பேசி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.



இந்தநிலையில் நேற்று முத்துப்பாண்டி, பாளையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கச்சேரி நடத்துவதற்காக சென்றார். இதுபற்றி அறிந்துகொண்ட வேலம்மாள்  உறவினர்கள் காரில் அங்கு வந்தனர்.

கச்சேரி முடிந்து வெளியில் வந்த முத்துப்பாண்டியை காரில் தூக்கிப்போட்டு கொண்டு தச்சநல்லூர் நோக்கி பறந்தனர்.   மணிமூர்த்தீஸ்வரம் அருகே அவரை காரில் இருந்து இழுத்து போட்டு அடித்து உதைத்தனர். வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு அந்த  வழியாக வந்த தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார், வாலிபரை கும்பல் தாக்குவதை பார்த்து அவர்களை பிடிக்க விரட்டினர். ஆனால் அந்த  கும்பல் முத்துப்பாண்டியை காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு மீண்டும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

 

ஆனால் போலீசார் விடாமல் துரத்திச் சென்று நெல்லை கொக்கிரகுளம் அருகே காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த முத்துப்பாண்டியை பத்திரமாக  மீட்டு, 4 பேர் கும்பலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் வேலம்மாளின் உறவினர்கள் மருகால்குறிச்சி உடையார்,  சிங்கிகுளம் ஐயப்பன் உள்ளிட்ட 4 பேர் என்பது தெரியவந்தது.

இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

.

மூலக்கதை