மண்ணச்சநல்லூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான அடைவுத்தூண் கண்டுபிடிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மண்ணச்சநல்லூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான அடைவுத்தூண் கண்டுபிடிப்பு

தா. பேட்டை: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த சோழங்கநல்லூர் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால சிவலிங்கம் மற்றும் பழமையான துலா கிணறு,  முற்கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் போன்ற தொன்மையான தடயங்கள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. தற்போது இங்குள்ள ஏரி அருகே  உள்ள மண்மேட்டில் சோழர் காலத்தை சேர்ந்த நீர்பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்ட அடைவுத்தூண் கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி முசிறியை சேர்ந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பாபு கூறியதாவது:சோழர்கள் ஆட்சி காலத்தில் விவசாயத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பல ஊர்களிலும் ஏரிகள், குளங்கள், கிணறுகள் வெட்டப்பட்டன.

இவ்வாறு  வெட்டப்பட்ட நீர் நிலைகளின் எல்லைகளை குறிக்கும் வகையில் அவற்றின் கரை மதகு போன்ற இடங்களில் இவ்வகை அடைவுத்தூண் நடப்படும்.

தற்போது  இங்கு கண்டறியப்பட்டுள்ள இத்தூண் 4 அடி உயரம் உள்ளது.

தூணின் அடிப்பகுதி சதுர வடிவத்திலும், அச்சதுர வடிவின் ஒருபுறம் பூ வேலைப்பாடும்  காணப்படுகிறது. தூணின் அமைப்பு சிவலிங்க வடிவத்தை கொண்டதாகவும், தூணின் மேற்புரத்தில் மூன்று வட்ட வடிவ கோடுகளும் காணப்படுகிறது.

மேலும்  தூணின் கீழ்பகுதி ஒரு அடி அளவில் பூமியில் நடப்படும் வகையில் அதன் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது சோழர் காலத்தில் நீர் பாசனத்தின்  முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இவ்வகை அடைவுத்தூண்கள் தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற இடங்களில் தொல்லியல்  ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. இத்தூண் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இத்தகைய தொன்மை சின்னங்கள் தமிழர்  பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் சான்றாகும். இவ்வாறு கூறினார்.

.

மூலக்கதை