விளைச்சல் குறைந்ததால் உளுந்தம் பருப்பு விலை கிடுகிடு

தினகரன்  தினகரன்
விளைச்சல் குறைந்ததால் உளுந்தம் பருப்பு விலை கிடுகிடு

சேலம்: உளுந்து விளைச்சல் குறைந்ததால், மார்க்கெட்டுக்கு 30 சதவீதம் வரத்து சரிந்தது. இதன் காரணமாக உளுந்தம் பருப்பு  மூட்டைக்கு 1,500  அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஆந்திரா, தமிழகத்தில் சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில்  உளுந்து அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் உளுந்து இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.  கடந்த இரு மாதமாக தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் உளுந்து விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக உளுந்தம் பருப்பு விலை உயர்ந்து  வருகிறது.இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை உளுந்தம்பருப்பு மொத்த வியாபாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மார்க்கெட்டுகளுக்கு வடமாநிலங்களில் இருந்துதான் உளுந்து விற்பனைக்கு வருகிறது. விவசாயிகள் உளுந்தை  அறுவடை செய்து, அரவை ஆலைகளுக்கு மூட்டையாக அனுப்பி வருகின்றனர். ஆலையில் முழு உளுந்தாகவும், அரை உளுந்தாகவும் அரைத்து  விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் உளுந்து விளைச்சல் சரிந்துள்ளது. இதன் காரணமாக  மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரவேண்டிய வரத்தில்    30 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் உளுந்தம் பருப்பு விலை உயர்ந்துள்ளது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு 100 கிலோ மூட்டை 8 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. படிப்படியாக மூட்டைக்கு 1,500 உயர்ந்து, தற்போது மூட்டை  9,500 என விற்பனை செய்யப்படுகிறது. அடுத்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதம் புது உளுந்து விற்பனைக்கு வர இருக்கிறது. அப்போது விலை குறைய  வாய்ப்புள்ளது. புது உளுந்து விற்பனைக்கு வரும்வரை, விலை குறைய வாய்ப்பில்லை என்றனர்.* தமிழகத்தில் பெரும்பாலான மார்க்கெட்களுக்கு வடமாநிலங்களில் இருந்துதான் உளுந்து விற்பனைக்கு வருகிறது.* கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து விளைச்சல் சரிவால் உளுந்து வரத்து குறைந்துள்ளது.* கடந்த மாதம் 100 கிலோ மூட்டை 8,000க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு இது 9,500ஆக உயர்ந்துள்ளது.* அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் புது உளுந்து விற்பனைக்கு வரும். அப்போது விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள்  தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை