திணறல்!

தினமலர்  தினமலர்

வேகமாக பரவும் காய்ச்சலால் மாநகராட்சி...கட்டுப்படுத்த முடியாமல் நிர்வாகம் தவிப்பு டாக்டர், சுகாதார ஆய்வாளர் பற்றாக்குறை- நமது நிருபர் -சென்னை மாநகராட்சியில் நிலவி வரும், டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறை காரணமாக, வேகமாக பரவி வரும் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல், மாநகராட்சி சுகாதாரத் துறை திணறி வருகிறது.சென்னை மாநகராட்சியில், டெங்கு, பன்றி காய்ச்சல், மலேரியா, நிமோனியா மற்றும் வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு, மக்களை மிரள வைத்துள்ளது.மற்ற காய்ச்சலை ஒப்பிடுகையில், டெங்கு, பன்றி காய்ச்சலால், உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.டெங்கு பாதிப்புதொடர்ந்து அதிகரித்து வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டிய சென்னை மாநகராட்சியில், டாக்டர்கள் மற்றும் சுகாதார உதவி ஆய்வாளர்கள் பற்றாக்குறை, அதிகமாக உள்ளது.இதன் காரணமாக, சுகாதார பணிகளை செய்ய முடியாமலும், பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமலும், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், 1,000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால், பாதிக்கப்பட்டுள்ளனர்; இதுவரை, 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல், பன்றி காய்ச்சலால், 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில், 24 மணி நேரம் செயல்படக்கூடிய மருத்துவமனைகளும் உள்ளன.ஆனால், 100க்கும் குறைவான டாக்டர்களே பணியில் உள்ளனர். பல இடங்களில், இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களை, ஒரு டாக்டர் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.மேலும், காய்ச்சலில் தனியார் மருத்துவமனைக்கு செல்வோருக்கு, அங்கு சிகிச்சை அளிக்கக்கூடாது; அவர்களை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் காரணமாக, தினமும், 200க்கும் மேற்பட்ட நோயாளிகள், சுகாதார மையங்களுக்கு வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும், ஒரு டாக்டரால் சிகிச்சை அளிக்க முடிவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது:நோய் பரவக்கூடிய இடம் அறிந்து, அதை கட்டுப்படுத்தும் பணியை, சுகாதார ஆய்வாளர்கள் செய்து வருகிறோம்.இதுதவிர, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்கிறோம்.சென்னை மாநகராட்சியில், 232 சுகாதார ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், 108 பேர் மட்டுமே உள்ளனர்.ஒவ்வொரு சுகாதார ஆய்வாளருக்கும், ஒரு அலுவலர் இருக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள, 108 சுகாதார ஆய்வாளர்களுக்கு, 30 அலுவலர்கள் மட்டுமே, உதவியாளர்களாக பணியில் உள்ளனர்.இதில், பல சுகாதார உதவி ஆய்வாளர்கள், இரண்டு வார்டுகளை கண்காணிக்க வேண்டி உள்ளது. அவர்களுக்கு, உதவி அலுவலரும் இருப்பதில்லை.உயிரிழப்பு இல்லைஇதுபோன்ற காலி பணியிடங்களால், சுகாதார பணியை சரிவர செய்ய முடிவதில்லை. தற்போது அதிகரித்து வரும், டெங்கு, பன்றி காய்ச்சலையும் கட்டுப்படுத்த முடியவில்லை.இது குறித்து, அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும், அவர்கள் கண்டு கொள்வதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினார்.மாநகராட்சி சுகாதார அதிகாரி கூறியதாவது:சென்னையில் டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது. இதுவரை, டெங்கு காய்ச்சலால் இரண்டு பேர் இறந்துள்ளனர்; பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு இல்லை.டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான். தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களால், நிலைமையை சமாளித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

நிலுவை வழக்கால் சிக்கல்!சென்னை மாநகராட்சியில், புதிதாக சுகாதார ஆய்வாளர்களை நியமிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப, மாநகராட்சி தேர்வு நடத்தியது. அதில், தனியார் பல்கலைக் கழகத்தில், பொது சுகாதாரம் படித்தவர்களும் பங்கேற்றனர். ஆனால், காந்தி கிராமம் பல்கலைக் கழகத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமே, சுகாதார ஆய்வாளர் பணி வழங்க வேண்டும் என, அரசாணை இருப்பதாக கூறி, பணி நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், சுகாதார ஆய்வாளர்களை, மாநகராட்சியால் நியமிக்க முடியவில்லை. வழக்கை தீர்த்து வைக்கும் முயற்சியையும், மாநகராட்சி எடுக்கவில்லை.

அன்றே சொன்னது, 'தினமலர்'சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார அலுவலர்களுக்கு, மற்ற நகராட்சி, மாநகராட்சி களுக்கு, முன், பணியிட மாறுதல் வழங்கப்படாமல் இருந்தது. இதனால், மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது. ஆனால், மூன்று ஆண்டுகளாக, தென்மாவட்டங்களை சொந்த ஊராக கொண்ட, பல சுகாதார ஆய்வாளர்கள், மேல்மட்டத்தில் பணம் கொடுத்து, மாநகராட்சி விதியை தளர்த்தி, மற்ற மாநகராட்சி, நகராட்சிகளுக்கு பணியிட மாறுதல் பெற்றனர். இதுவரை, 30க்கும் மேற்பட்டோர், அவ்வாறு பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். இந்த பணியிட மாறுதல்கள் வழங்கும் போதே, 'இவ்வாறு பணியிட மாறுதல் வழங்கப்பட்டால், சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, நோய் பரவும் காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும்' என, நமது நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டியது. அது தற்போது உண்மையாகி வருகிறது.



மூலக்கதை