அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
அதிகரிப்பு

காலி மனைகளில் கொசு உற்பத்தி...காய்ச்சல் பரவுவதால் மக்கள் அவதி-
திண்டிவனம்:திண்டிவனம் நகரம் மற்றும் அதையொட்டியுள்ள கிராமங்களில் பாகுபாடின்றி, ரியல் எஸ்டேட் தொழில் நடந்தது. மனையில் முதலீடு செய்தால் பாதுகாப்பானது என, பலரும் பிளாட் வாங்கி போட்டுள்ளனர்.வாங்கிய மனைகளில், வீடு கட்டாமல், காலி மனைகளாக போடப்பட்டுள்ளதால் புதர்கள் மண்டி, கழிவு நீர் தேங்கும் இடமாக மாறி உள்ளன. இந்த, காலி மனைகளில் கோரை புற்கள் வளர்ந்து, இலவம் பஞ்சு காய்கள் வெடித்து பஞ்சு பறப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.காலிமனைகள் அனைத்தும் குப்பை கொட்டும், கழிவு நீர் விடும் இடங்களாக மாறிவிட்டன. இந்த காலிமனைகளில் கொசு உற்பத்தி ஜோராக நடந்து வருகிறது. இரவில், கொசுக்கடியால் துாக்கத்தை தொலைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதோடு, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.கொசு மருந்து தெளிக்கும் பணிகள், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்ற போதிலும், கொசுக்கள் குறைந்த பாடில்லை. காலி மனைகளால் அனைத்து பகுதிகளிலும் டெங்கு, மலேரியா நோய் தாக்கம் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.சமூக பொறுப்புடன், மழை நீர் தேங்கும் அளவு பள்ளங்கள் கொண்ட மனை உரிமையாளர்கள், அந்த மனைகளை மேடாக்கி, மழை நீர் தேங்காதவாறு தடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு நகராட்சி சார்பில், நோட்டீஸ் வழங்கி, மனைகளை மேடாக்க அறிவுருத்த வேண்டும்.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திண்டிவனம் மற்றும் அதைச்சுற்றி பிளாட் போட்டு விற்கப்படுகிறது. அதை வாங்கும், உரிமையாளர்கள், வீடு கட்டாமல் அப்படியே போட்டுள்ளனர். காலி மனைகளில், தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிகரித்து விட்டன.இது குறித்து நகராட்சியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும், உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கின்றனர். ஆனால், மனை உரிமையாளர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். காலி பிளாட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் பொது மக்கள் கொசுக்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால், டெங்கு, மலேரியா போன்ற நோய் தாக்குதலுக்கு பஞ்சமே இருக்காது. எனவே, திண்டிவனம் நகராட்சி, தண்ணீர் தேங்கும் அளவிற்கு காலிமனை வைத்துள்ள உரிமையாளர்களுக்கு, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மூலக்கதை