கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் லட்சக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் லட்சக்கணக்கில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து குவிந்துள்ளன. 

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும்.

பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரைக்கு, ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றன. 

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு சைபீரீயா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் 4 அடி உயரம் உள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு சேர்ப்பது குறிப்பிடத் தக்கது .

மேலும் கொசு உள்ளான், கூழைக்கிடா, கரண்டி மூக்குநாரை, சிவப்புகால் உள்ளான்,

ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, பர்மாவில் இருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையில் இருந்து வரும் கடல்காகம், ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து வரும் ஆர்டிக்டேன் (ஆலா) இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் என 247 வகைப் பறவைகளும் ஆண்டு தோறும் வந்து செல்கின்றன.

 பருவமழை தொடங்கிய நிலையில் தற்போது சைபீரியாவிலிருந்து பூநாரை உள்ளான், கரண்டிமூக்கு நாரை, சிறவிகள், இலங்கை பர்மாவில் இருந்து கூழைக்கிடா, செங்கால் நாரை, கடல்காகம் மற்றும் உள்ளூர் பறவைகளான கொக்கு, மடையன், சாம்பல்நாரை, பவளக்கால் உள்ளான் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பறைவகள் வந்து உள்ளன. 

இந்த பறவைகளை கோடியக்கரை பம்பு ஹவுஸ், நெடுந்தீவு, சிறுதலைகாடு ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் பறவைகளை பார்க்கலாம் எனவும், பறவைகளை பார்ப்பதற்கான வழிகாட்டி, தங்கும் அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சுற்றுலா பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ளன.

மேலும் சென்ற ஆண்டு பறவைகள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை 30,805 சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். இந்த ஆண்டு சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேல் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கோடியக்கரை வனச்சரகர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்து உள்ளார்.

 இந்த பறவைகள் சரணாலயத்தின் சிறப்பு அம்சமாக கோடியக்கரையிலிருந்து பழந்தின்னி வவ்வால்கள் நாள்தோறும் இலங்கை அனுராதாபுரம் காட்டுப்பகுதிக்கு சுமார் 28 மைல் தூரத்தில் பறந்து சென்று பழங்களை தின்று நாள்தோறும் திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை