குமரியில் விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலையை இணைத்து பாலம்: மத்திய அமைச்சர் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
குமரியில் விவேகானந்தர் பாறை திருவள்ளுவர் சிலையை இணைத்து பாலம்: மத்திய அமைச்சர் தகவல்!

குமரியில் விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலையை இணைத்து ரூ.32 கோடி செலவில் பாலம் கட்டப்படுவதாக அமைச்சர் கூறினார்.

ஆயுதபூஜை, விஜயதசமி பூஜை மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் கன்னியாகுமரி, குற்றாலம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. 

உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான குமரியில் உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்துள்ளனர். அங்கு முக்கடலும் கூடும், திரிவேணி சங்கமத்தில் அதிகாலை சென்ற அவர்கள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். 

பின்னர் சுற்றுலாப் படகில் சென்று கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட்டனர். பகவதி அம்மன் கோவில், காந்தி மண்டபம், கோவளம் கடற்கரை உள்ளிட்ட இடங்களை பார்க்கவும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டினர். 

சுற்றுலாப் பயணிகள் வருகையால் வியாபாரம் களைகட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குமரியில் சுற்றுலா இடங்களை சுற்றுலாத் துறை மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

 ரூ.32 கோடி செலவில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலையை இணைத்து பெரிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டாலும் அரசு பரிசீலிக்கும். அதனை தனித்திட்டமாகவும் நிறைவேற்ற முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

 குமரியில் ரூ.100 கோடி மதிப்பில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதை அவர் பார்வையிட்டார்

மூலக்கதை