சமுதாய கூடத்துக்கு ஒதுக்கிய தொகை அதோகதி...எங்கே சென்றது நிதி!மங்கலம் ஊராட்சி மக்களுக்கு கிடைக்குமா, நீதி

தினமலர்  தினமலர்
சமுதாய கூடத்துக்கு ஒதுக்கிய தொகை அதோகதி...எங்கே சென்றது நிதி!மங்கலம் ஊராட்சி மக்களுக்கு கிடைக்குமா, நீதி

திருப்பூர்:சமுதாய கூடத்துக்கு ஒதுக்கிய நிதி மாயமானதால், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் கட்டிய, சமுதாயக் கூடம், இதுவரை கணக்கு முடிக்கப்படாமல், பாழடைந்து வருகிறது.திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, மாநகராட்சியை ஒட்டியுள்ள, மிகப்பெரிய ஊராட்சி. 10 குக்கிராமங்களில், 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக, இரண்டு இடங்களில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளன.
முன்னாள் ராஜ்யசபா எம்.பி., சோ அளித்த நிதியில், அக்ரஹாரபுத்துாரில் கட்டப்பட்டது. முன்னதாக, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, கூடுதல் வசதிகளுடன் கட்டப்பட்டது. ஒன்றிய பொது நிதியில், அக்ரஹாரப்புத்துாரில் கூடுதல் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.கடந்த, 2009-10ல், புதிய கட்டடம் கட்டப்பட்டது. கட்டுமான பணிக்காக ஒதுக்கிய நிதி எங்கு சென்றது என தெரியவில்லை. இதுநாள் வரை, கட்டடம் கட்டியவருக்கான தொகையை வழங்காமல், சமுதாய நலக்கூட கட்டடம், கணக்கில் வராத கட்டடமாக வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:ஒவ்வொரு முகூர்த்த நாளிலும், சமுதாயக்கூடம் அதிக அளவில், பயன்படுத்தப்படுகிறது. ஒன்றிய நிதியில், கூடுதல் கட்டடம் கட்டியதில் பல்வேறு குழப்பம் நீடிக்கிறது. கட்டுமான பணிகளை மேற்கொண்ட நபருக்கு, ஒரு ரூபாய் கூட வந்து சேரவில்லை என்கின்றனர்.அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்று, கட்டுமான பணி நடந்து முடிந்தது. ஆனால், அதற்கான நிதி இதுவரை வழங்கப்படவில்லை. கணக்கில் இல்லாத கட்டடம் என்பதால், ஊராட்சி நிர்வாகமும், கூடுதல் கட்டடம் பராமரிப்பு செய்யாமல் போட்டு வைத்துள்ளது.
பழைய கட்டடம், பராமரிப்பு பணி நடந்ததால், புதுப்பொலிவுடன் இருக்கிறது. ஒன்றிய அதிகாரிகளும், இப்பிரச்னையை கண்டுகொள்வதே இல்லை. ஒன்றியக்குழு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது என, கண்டறிய வேண்டும். பாழடைந்து வரும் சமுதாயக்கூட கட்டடத்தை புதுப்பிக்கவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த, ஒன்பது ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு, மாவட்ட நிர்வாகம் நியாயமான தீர்வு காண முன்வர வேண்டும். கட்டடத்தை, ஊராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி, கூடுதல் வசதிகளுடன், பராமரிப்பு பணிகளை செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.
ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பாலசுப்ரமணியத்திடம் கேட்டபோது, ''இதுகுறித்து, இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் விசாரித்து, சமுதாயக்கூட கூடுதல் கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மூலக்கதை