பெரியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு எச்.ராஜா மீது 4 வழக்குகள் பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெரியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு எச்.ராஜா மீது 4 வழக்குகள் பதிவு

ஈரோடு: தந்தை பெரியார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பாஜ தேசிய செயலாளர் எச். ராஜா மீது ஈரோட்டில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜ தேசிய செயலாளர் எச். ராஜா மேடை பேச்சுகளின் போதும், சமூக வலைதளங்களிலும் தந்தை பெரியார் குறித்தும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திராவிட இயக்கங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார். திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழகத்தில் தந்தை பெரியாரின் சிலைகளை உடைக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தனது முகநூல் பக்கத்தில் எச். ராஜா பதிவிட்டிருந்தார். இது தமிழகம் முழுவதும் திராவிட இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து முகநூலில் தாம் பதிவிடவில்லை என்றும், தன்னுடைய அட்மின் தவறாக பதிவிட்டதாக கூறினார்.
இதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்ப பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மேடையில் பேசினார். பின்னர் அடுத்த நாளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போலீஸ் குறித்தும், நீதிமன்றம் குறித்தும் அவதூறான வகையில் பேசினார்.



இதைத்தொடர்ந்து எச். ராஜா மீது மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஈரோடு டவுன் போலீசில் தந்தை பெரியார் சிலைகளை உடைப்பேன் என்று கூறியுள்ள எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி கடந்த மார்ச் மாதம் தந்தை பெரியார் திராவிடர் கழக ஈரோடு மாவட்ட செயலாளர் குமரகுருபரன் புகார் மனு அளித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் போலீசார் நேற்று நள்ளிரவு திடீரென்று எச். ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 159, 505 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதே போல திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான அந்தியூர் செல்வராஜ் கொடுத்த புகார் மனு மீதும், எஸ்டிபிஐ கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனு என ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் 3 வழக்குகளும், கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் 1 வழக்கு என மொத்தம் 4 வழக்குகள் எச். ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை