அரசு பஸ்களை சுத்தம் செய்ய... கூவி அழைத்தாலும் ஆளில்லை! போக்குவரத்து அதிகாரிகள் திணறல்

தினமலர்  தினமலர்
அரசு பஸ்களை சுத்தம் செய்ய... கூவி அழைத்தாலும் ஆளில்லை! போக்குவரத்து அதிகாரிகள் திணறல்

திருப்பூர் : அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணிக்கு, பணியாளர்கள் கிடைக்காததால், போக்குவரத்து துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தின் கீழ், திருப்பூர் உள்ளது. காங்கயம் ரோட்டில், டிப்போ, 1 மற்றும், 2 செயல்படுகிறது. தாராபுரம், பழநி, பல்லடம், காங்கயம் உள்ளிட்ட கிளை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இரு டிப்போவில் இருந்தும், தினசரி, டவுன் மற்றும் சர்வீஸ் பஸ்கள் என, 163 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான பஸ்களின் உட்புறம் சுத்தமில்லாமல் உள்ளன. தின்பண்டங்களின் காலி பாக்கெட், சாக்லெட் கவர், காகிதம், டம்ளர், பாட்டில் என, குப்பை நிறைந்தே காணப்படுகிறது.

டிப்போவில் நிறுத்தப்படும் பஸ்களின் உள் மற்றும் வெளிப்புறம் சுத்தம் செய்ய, தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.ஆனால், இப்பணியை செய்ய, யாரும் முன்வருவதில்லை என்பது தான், அதிர்ச்சி தரும் விஷயம். பஸ்களை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு, ஒரு பஸ்சை சுத்தம் செய்தால், 15 - 20 ரூபாய் மட்டுமே, அரசின் சார்பில், கூலி வழங்கப்படுகிறது.

பெரும்பாலான பஸ்கள் இரவு, 12:00 மணிக்கு மேல் தான் டிப்போவுக்குள் வரும் என்பதால், நள்ளிரவு, 12:00 மணி முதல், அதிகாலை, 5:00 மணி வரை தான் பஸ்களை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். இதனால், இப்பணியை செய்ய யாரும் முன்வருவதில்லை.தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'திருப்பூரில், பின்னலாடை தொழிலில், குறைந்தபட்சம், 350 ரூபாய் தினக்கூலியாக சம்பாதிக்க முடியும்.

10 பஸ்களை சுத்தம் செய்தால் கூட, 200 ரூபாய் கிடைக்காது என்ற நிலையில், யாரும் இப்பணிக்கு வரமாட்டார்கள். எனவே, அரசு, கூலித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்,' என்றனர். இதற்கிடையில், பஸ்களை சுத்தம் செய்யும் பணிக்கு ஆட்கள் தேவை என, போக்குவரத்து கழகம் சார்பில், பஸ்களில், துண்டு பிரசுரம் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், யாரும் முன்வருவதாக இல்லை. பஸ்களை சுத்தம் செய்ய பணியாளர்கள் கிடைக்காததால், பஸ் பராமரிப்பு என்பது, கேள்விக் குறிதான்.

மூலக்கதை