திருத்தணியில் அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருத்தணியில் அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி

திருத்தணி: திருத்தணி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். திருத்தணி மின்வாரிய கோட்டத்தில் திருத்தணி நகரம், கனகம்மாச்சத்திரம், பூனிமாங்காடு, கேஜி கண்டிகை, ஆர்கே. பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை பகுதிகளில் துணை மின்நிலையங்கள்  உள்ளன.

திருத்தணி துணைமின் நிலையத்தில் இருந்து நகரம்1  நகரம் 2 மற்றும் லட்சுமிபுரம், குன்னத்தூர் நாபலூர், பொன்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதி கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

இதனால் மாணவர்களும் பொதுமக்களும் கடும் அவதியுறுகின்றனர்.

காலாண்டு தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவர்கள் மிகவும் திண்டாடுகின்றனர்.

விவசாயத்துக்கு மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
இதுபற்றி மக்கள் கூறுகையில், ‘’ திருத்தணி பகுதியில் சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது.

விவசாயத்துக்கு சரியான மின்சாரம் சப்ளை கிடையாது. தினமும் 2, 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.

இதனால் அன்றாட பணிகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த பிரச்னைக்கு மின்சார வாரியம் தீர்வு காணவேண்டும்’ என்றனர்.

.

மூலக்கதை