செங்குன்றம் அருகே பிரபல கொள்ளையன் கொலை ஏன்?: போலீசில் சரணடைந்த 3 பேர் திடுக் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
செங்குன்றம் அருகே பிரபல கொள்ளையன் கொலை ஏன்?: போலீசில் சரணடைந்த 3 பேர் திடுக் தகவல்

புழல்: செங்குன்றம் அருகே பிரபல கொள்ளையன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் போலீசில் சரணடைந்தனர். கொலை குறித்து திடுக் தகவல் வெளியானது.

செங்குன்றம் எடைப்பாளையம் ஏரிக்கரையை சேர்ந்தவர் ராகுல் (26), பிரபல கொள்ளையன். இவர் மீது, சோழவரம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன், செயின் பறிப்பு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராகுலை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு எடைப்பாளையம் தந்தை பெரியார் தெருவில் ராகுல் நடந்து சென்றபோது, 2 பைக்கில் வந்த 6 பேர், ராகுலை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ராகுல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

ஆனாலும், ஆத்திரம் தீராத கும்பல், அவரது கழுத்தை துடிக்க துடிக்க அறுத்து விட்டு தப்பியது.

தகவலறிந்து சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ராகுலின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார், வழக்கு பதிந்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய எடைப்பாளையம் கிருஷ்ணா நகர் 4வது தெருவை சேர்ந்த மாதவன் (28), அதே பகுதியை சேர்ந்த பிரசன்னா (27), பாடியநல்லூர் மூர்த்தி நகரை சேர்ந்த அப்பு (எ) சாயின்ஷா (24) ஆகிய மூவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் கூறுகையில், ‘கொள்ளை பணத்தில் பங்கு போட்டதில் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராகுல், எங்களை ஆபாசமாக திட்டியதோடு, கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் நாங்கள் முந்திக்கொண்டு, ராகுலை தீர்த்துக்கட்டினோம்’ என்றனர்.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

.

மூலக்கதை