அசட்டை!கடிதம் எழுதியும் நெடுஞ்சாலைத்துறை... கழிவு நீர் கால்வாய் கட்டுவதால் சிக்கல்

தினமலர்  தினமலர்
அசட்டை!கடிதம் எழுதியும் நெடுஞ்சாலைத்துறை... கழிவு நீர் கால்வாய் கட்டுவதால் சிக்கல்

பெ.நா.பாளையம்:'சின்ன வேடம்பட்டி ராஜவாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நெடுஞ்சாலைத்துறைக்கு, பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது. இருப்பினும், கால்வாய் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து மேற்கொள்கிறது.துடியலுார் அருகே செல்லும் சின்ன வேடம்பட்டி ராஜவாய்க்கால், விவசாயிகளிடம் நிலம் ஆர்ஜிதம் செய்து, கட்டப்பட்ட ஊட்டுக்கால்வாய். பருவ மழைக்காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், வெள்ளமென பெருகி, கணுவாய் மேல் அணை மற்றும் கீழ் அணைகளை நிரப்பி, சின்ன வேடம்பட்டி ராஜவாய்க்கால் வழியாக வெளியேறி, சின்ன வேடம்பட்டி குளத்தை நிரப்பும்.மேட்டுப்பாளையம் ரோட்டை சமீபத்தில் விரிவாக்கம் செய்த நெடுஞ்சாலைத்துறையினர், ரோடு ஓரம் வடிகால் அமைத்துள்ளனர். அதை ராஜவாய்க்காலில் சேரும் வகையில் இணைத்துள்ளனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், வடிகால் வழியாக ராஜவாய்க்காலில் சேர்ந்து சின்ன வேடம்பட்டி ஏரியை அடையும். ஏரியில் கழிவுநீர் கலந்து, கோவையில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என, விவசாயிகள் முறையிட்டனர். பொதுப்பணித்துறை நீர்வள ஆதார உதவி இன்ஜினியர் ஜெயப்பிரகாஷ், நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில், 'குளத்துக்கு வரும் ஊட்டுக்கால்வாயில், நேரிடையாக கழிவுநீர் கலக்கும் வண்ணம் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை கால்வாயில், கழிவுநீர் வாய்க்கால் நீரை நேரிடையாக விடுவது, குளத்து நீரை மாசுபடுத்துவதாக உள்ளது. கழிவுநீரை சுத்திகரித்து, பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் திட்டம் அமைக்கவேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.கடிதம் தொடர்பான நகல் பவானி சாகர் அணைக்கோட்டம் செயற்பொறியாளர், கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும், கழிவுநீர் கால்வாயை, ராஜவாய்க்காலுடன் இணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மூலக்கதை