விவசாயிகளின் எதிர்ப்பால் 6 வழிச்சாலையாகிறது..... சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் அதிரடி மாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விவசாயிகளின் எதிர்ப்பால் 6 வழிச்சாலையாகிறது..... சேலம்சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் அதிரடி மாற்றம்

சேலம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8வழி பசுமை விரைவுச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது.

ேசலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வழியாக கொண்டு செல்லப்படும் இந்த 8 வழிச்சாலையை 277 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்க முடிவு செய்தது.
திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், லட்சக்கணக்கான மரங்கள், நூற்றுக்கணக்கான நீர்நிலைகள், 8 மலைகள் சேதாரமாகும் என்பதால் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இயற்கை ஆர்வலர்களோடு இணைந்து போராட்டங்களையும் நடத்தினர். ஆனால் இதைப் ெபாருட்படுத்தாமல் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர்கள், போலீஸ் படையோடு சென்று நிலங்களை அளவீடு செய்து, முட்டுக்கல் நட்டனர்.


இந்நிலையில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதி மன்றம், கடந்த மாதம் 21ம் தேதி நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை மீறி நில ஆர்ஜிதம் செய்ததால் 8 வழிசாலை திட்டத்திற்கு ஏன் முழுமையாக தடை விதிக்க கூடாது என நீதிபதிகள் ேகள்வி எழுப்பினர்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தை 6 வழிச்சாலை திட்டமாக மாற்றி செயல்படுத்த இந்திய ேதசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு முதலில் ரூ. 10 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அதிகாரிகள் மேற்கொண்ட களப்பணி காரணமாக திட்ட மதிப்பீட்டு தொகையானது ரூ. 7 ஆயிரத்து 210 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த திட்டத்துக்காக வனப்பகுதியில் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது 103 ஏக்கராக அது குறைக்கப்பட்டு உள்ளது.

அதுபோல வனப்பகுதியில் 13. 2 கி. மீ. தூரத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

தற்போது இந்த தூரம் 9 கி. மீ. ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த பசுமை வழிச்சாலை 90 மீட்டர் அகலத்தில் மதிப்பிடப்பட்டு இருந்தது.

தற்போது சாலையின் அகலம் 70 மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் இந்த சாலை செல்லும் போது கணக்கிடப்பட்டிருந்த 70 மீட்டர் அகல சாலையானது, தற்போது 50 மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.

வனப்பகுதியில் அணுகுசாலை (சர்வீஸ் ரோடு) அமைக்க இருந்த திட்டமும் கைவிடப்பட்டு உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 560 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

தற்போது அது 1,900 ஹெக்டேராக குறைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சில இடங்களில் அமைக்கப்பட இருந்த 8 வழிச்சாலையை, 6 வழிச்சாலையாக மாற்றி அமைத்திருக்கிறோம்.

எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் போன்ற தேவைகள் அடிப்படையில் இப்பகுதியில் 8 வழிச்சாலை அமைய வாய்ப்பு உள்ளது. முக்கியமாக பாலாற்றின் குறுக்கே மட்டுமே பாலம் அமைக்கப்படும்.

வேறு இடங்களில் பாலம் அமைக்கவேண்டிய சூழல் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

.

மூலக்கதை