சூடுபிடித்தது குட்கா வழக்கு டிஎஸ்பிக்கு சிபிஐ சம்மன்: டிஜிபி, ஜார்ஜிடம் விரைவில் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சூடுபிடித்தது குட்கா வழக்கு டிஎஸ்பிக்கு சிபிஐ சம்மன்: டிஜிபி, ஜார்ஜிடம் விரைவில் விசாரணை

சென்னை: குட்கா வழக்கில் சிபிஐ காவலில் எடுக்கப்பட்ட குட்கா உரிமையாளர் உட்பட 5 பேரிடம்  நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டருக்கு சிபிஐ நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் டிஜிபி டி. கே. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் அதிகாரிகள், அமைச்சரிடம் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை, மத்திய கலால் துறை உள்ளிட்டவர்களுக்கு ரூ. 40 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து டெல்லி சிபிஐ அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் திடீர் திருப்பமாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி. கே. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதோடு அவர்களது வீடுகளில் சோதனைகளும் நடத்தப்பட்டன.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குட்கா தயாரிப்பாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் 5 பேரையும் 5 நாள் காவல் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 பேருக்கு 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த  உத்தரவிட்டது. அதைதொடர்ந்து குட்கா வியாபாரிகள் மாதவராவ், உமாசங்கர், சீனிவாச ராவ், உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன் ஆகிய 5 பேரை நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையில் குட்கா வியாபாரிகள் 3 பேரும் காவல் துறையில் உள்ள கீழ் நிலை அதிகாரிகள் தங்களை முதலில் வந்து அனுகியதாக தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து தான் உயர் போலீஸ் அதிகாரிகள் வரை அனைவருக்கும் லஞ்சம் வழக்கப்பட்டதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.



ஆனால் யாருமே தங்களுடைய செல்போனில் இருந்தோ, அலுவலக போனில் இருந்தோ தொடர்பு கொள்ளவில்லை. அதற்கு பதிலாக ரகசிய செல்போன் எண்ணை வாங்கி அந்த செல்போன் எண்ணில் இருந்து பேசி லஞ்சம் வாங்கிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் வாங்குவதற்காகவே இந்த எண்ணை அவர்கள் பயன்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் படி உதவி கமிஷனராக இருந்த மன்னர்மன்னன் மற்றும் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சம்பத் குமார் ஆகியோர் ேநரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது.

இருவரையும் குட்கா வியாபாரிகளாக மாதவராவ், உமாசங்கர், சீனிவாச ராவ் ஆகியோர் முன்னிலையில் லஞ்சம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ சம்மன் படி இன்று அல்லது நாளை டிஎஸ்பி மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் நேரில் ஆஜராவார்கள் என்று கூறப்படுகிறது.

அதேநேரம் இன்ஸ்பெக்டர் சம்பத் குமார் வீட்டில் இருந்து லஞ்சம் பெற்றதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதால் அவரது வீட்டை கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 குட்கா வழக்கில் கீழ் மட்ட அதிகாரிகளிடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் தனது விசாரணையை தொடங்கி உள்ளது. ஏன் என்றால் காவல் துறையில் உயர் பதவியில் இருக்கும் நபர்கள் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதால் அவர்களை விசாரணை செய்ய அனைத்து ஆதாரங்களும் சேகரிக்க வேண்டும்.

அதற்கான பணியாக தான் தற்போது கீழ் நிலையில் உள்ள அரிகாரிகளுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடுத்ததடுத்த நடவடிக்கையால் விரைவில்  குட்கா வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி. கே. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு இன்று அல்லது நாளை சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிபிஐயின் அதிரடி நடவடிக்கையால் லஞ்சம் வங்கிய உயர் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். இதற்கிடையே மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ணன், உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகிய இருவரும் இன்று காலை ஜாமின் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.



.

மூலக்கதை